Sunday 24 September 2017

மஇகாவில் தேவை உருமாற்றம்; டத்தோஶ்ரீ சுப்ரா தலைமையில் முன்னெடுக்கப்படுமா?


சிறப்பு கண்ணோட்டம்: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கட்சியில் நிலவிய ஊட்பூசல்கள் தீர்க்கப்பட்டு ஒரு சுமூகமான சூழலில் தனது 71ஆவது பேராளர் மாநாட்டை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது மஇகா. டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடத்தப்படும் இந்த மஇகா மலேசிய இந்தியர்கள் மட்டுமின்றி கட்சியினரிடமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம், எந்நேரத்திலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 14ஆவது பொதுத் தேர்தலே ஆகும்.

டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையேற்று வழிநடத்தும் மஇகா, கடந்த இரு பொதுத் தேர்தல்கள் கண்ட தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கான அஸ்திவாரமாக இந்த பேராளர் மாநாடு அமையலாம் என நம்பப்படுகிறது.

அதற்கு மஇகா சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட திருத்தம், வேட்பாளர் விவகாரம், தொகுதி பங்கீடு, இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவிக்கவிருக்கும் திட்டங்கள் யாவும் என்னவென்பதே இன்றைய கேள்வியாகும்.

தாய்க்கட்சி
மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியாக திகழ்வது மஇகா மட்டுமே. பல்வேறு கட்சியினர் மஇகாவை  குறை சொன்னாலும் இந்தியர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அனைவரின் விரலும் முதலில் நீள்வது மஇகாவை நோக்கியே. அதுவே மஇகா இந்தியர்களின் தாய்க்கட்சி என்பதற்கான அடையாளம் ஆகும்.
14ஆவது பொதுத் தேர்தலை நோக்கி...
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் அதில் களமிறக்கப்படும்  மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது காலத்திற்கேற்ற அவசியமாகியுள்ளது.

தேசிய முன்னனியில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என மார்தட்டி கொள்ளும் மஇகா, இத்தேர்தலில் களமிறக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும்.

ஏனெனில் பெரும்பாலான மாநில சட்டமன்றத் தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் தோல்வியை தழுவுவதால் அங்கு இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலையை மாற்றியமைக்கூடியது அவசியமாகும். ஏனெனில் பல மாநிலங்களில் அம்னோ வேட்பாளர்கள் மட்டுமே அதிக தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அம்னோவின் தயவிலே சில மாநிலங்களில் இந்தியர்களுக்கு ஆலோசகர், சிறப்பு அதிகாரி போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெற்றியை தக்க வைத்துக் கொள்ளாமல் நியமனப் பதவிகளை நம்பிக் கொண்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா அடிமட்ட நிலைக்கு செல்ல நேரிடும்.

அம்னோவுக்கு எதிர்ப்பாக தற்போது பெர்சத்து கட்சி பலம் பெற்று வருகின்ற சூழலில் வரும் தற்போது அம்னோ வசமுள்ள சில தொகுதிகள் எதிர்க்கட்சி வசம் வீழ்ந்தால் மாநில ஆட்சியில் கூட இடம்பெற முடியாத இக்கட்டான சூழலுக்கு மஇகா தள்ளப்பட்டு விடும் என்பதை தலைவர்கள் நன்கு உணர வேண்டும்.
தேவையான உருமாற்றங்கள்
மஇகா தற்போது தன்னை உருமாற்றி கொள்ள வேண்டிய காலகட்டத்தில் உள்ளது. சொல்லப் போனால் மஇகாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் பல விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தற்போது மஇகா அமைப்பு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வந்து தேசிய, மாநில, தொகுதித் தலைவர்களுக்கான தேர்தலை நடத்த உத்தேசித்து வருகிறது.

அதேபோன்று பொதுத் தேர்தலில் தோல்வி காண்பவர்களுக்கு இரு தவணைக்கு மேல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமை, மக்கள் விரும்புபவர்களுக்கே போட்டியிட முன்னுரிமை, மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ளுதல், மக்களோடு மக்களாக களமிறங்குதல், மக்கள் புறக்கணித்தவர்களுக்கு  உயர்பதவிகள் வழங்கப்படாமை போன்ற நடவடிக்கைகளையும் மஇகா மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் (இந்தியர்கள்) விரும்பும் கட்சியாக மஇகா தன்னை நிலைப்படுத்தி கொள்ள வேண்டும். அதுவும் 71ஆவது பேராளர் மாநாட்டை நடத்தும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தலைமையிலேயே ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மஇகாவை இந்தியர்கள் கைவிடாமல் அதன் வெற்றியை தக்க வைக்க பாடுபடுவர். இல்லையேல் இந்தியர்களே கைவிடும் இக்கட்டான சூழலுக்கு மஇகா தள்ளப்படும்.
இந்த உண்மையை தலைவர்கள்  இனியேனும் உணர்வார்களா?

No comments:

Post a Comment