Tuesday 19 September 2017

மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தின் 'அன்புடன் ஒரு நாள்'

கிள்ளான் -
"வாழும் நாள் கொஞ்ச காலம்தாம்; இருக்கும் வரை எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்" என 'சச்சின்'  திரைப்படத்தில் நடிகர்  விஜய் ஒரு வசனத்தை சொல்வார்.

அதற்கேற்ப காப்பார், ரீத்தா இல்லத்தில் 'அன்புடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சியை படைத்து அங்குள்ள முதியோர், யுவதி, சிறுவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளனர் மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தினர்.
மலேசியாவில் விஜய் ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்து அதன் வாயிலாக பல்வேறு பயன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாமல், சமுதாயத்தையும் உட்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் என்று அதன் தலைவர் ஷர்மநாத் ராமன் கூறினார்.
அண்மையில் காப்பார் ரீத்தா இல்லத்தில் 'அன்புடன் ஒரு நாள்' நிகழ்ச்சி மிகப் பெரிய தாக்கத்தை எங்கள் மன்றத்தின் இளம் உறுப்பினர்களிடையே ஏற்படுத்தியது.
இன்றைய காலகட்டத்தில் யுவதிகளைத் திட்டித் தீர்ப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், அவர்களின் பொய்யுரைகளுக்கெல்லாம் செவி சாய்க்காமல், எங்களுக்கான தனி பாதையை அமைத்து அதில் செவ்வனே நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என ஷர்மா சொன்னார்.

தமது திரைப்படங்களின் வாயிலாக நடிகர் விஜய் பல நல்ல கருத்துகளை சொல்லி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை, விஜய் சொல்லும் நல்ல ஆலோசனைகளை, கருத்துகளை எங்களின் வாழ்நாளில் கடைப்பிடித்து வருகிறோம். அதற்கு சான்றாகத்தான் 'அன்புடன் ஒரு நாள்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


காப்பார், ரீத்தா இல்லத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தின் 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்.

அங்குள்ள முதியோர், யுவதிகள், சிறுவர்கள் ஆகியோருக்கான நடவடிக்கைகள் மிக நேர்த்தியான முறையில் நடைபெற்றன. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியது.
மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'அன்புடன் ஒரு நாள்' நிகழ்ச்சி காப்பார், ரீத்தா இல்லத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு, கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் மனத் திருப்தியைக் கொடுத்ததுள்ளது என்று அவர் பெருமையுடன் கூறினார்.

இதனிடையே, மலேசியாவில் செயல்பட்டு வரும் விஜய் ரசிகர் மன்றத்தில் ஏறக்குறைய 85 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள். சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் இவ்வேளையில் மன்றத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மன்றத்தின் செயலாளர் விக்னேஸ்வரன் சுந்தரம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment