Saturday 30 September 2017

இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கியவர் டத்தோஶ்ரீ நஜிப் – சிவராஜ்

கோலாலம்பூர்-
தம்மை 'மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை' என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது, எந்த வகையிலும் தவறாகாது. காரணம் முன்னாள் பிரதமர்களை காட்டிலும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் டத்தோஸ்ரீ நஜிப் தான் என ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு தொடங்கி, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அவர் பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கான மானியம், மைக்ரோ கடனுதவி திட்டம், தெக்குன், உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான இடங்கள், 10 ஆண்டுக்கான இந்திய மேம்பாட்டு வரைவு திட்டத்தை உருவாக்கியவரும் அவர்தான். இந்தியர்கள் அதிகமாக வாழும் எந்த நாட்டிலும் இம்மாதிரியான திட்டங்கள் இல்லை. அதில் இந்தியாவும் அடங்குமென  சிவராஜ் கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்தை ஜசெகவின் பேராசிரியர் இராமசாமி உடனடியாக சாடியுள்ளார். அதற்கு முன்னதாக ஜசெக இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக என்ன செய்தது என்பதை அவர் முதலில் கேட்க வேண்டும். குறிப்பாக கேலாங் பாத்தா தொகுதி உட்பட சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களில் இந்திய சமுதாயத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதை கூற முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான 90 கோடி வெள்ளி, இந்தியர்களின் உயர்கல்விக்காக 2 கோடி வெள்ளி, இந்தியர்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக 130 கோடி வெள்ளி, பிரதமர் துறையின் கீழ் இந்தியர் பொருளாதார திட்டவரைவுக் குழு என டத்தோஸ்ரீ நஜிப் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இன்னும் இருக்கின்றது என டத்தோ சிவராஜ் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ நஜிப்பின் அணுகுமுறைகளையும் செயல்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வந்தாலும், பி40 கீழ் இருக்கக்கூடியவர்கள், அதன் மூலம் பல்வேறு பலன்களை அடைந்துள்ளார்கள். இதுவரையில் பக்காத்தான் ஹராப்பான் இந்தியர்களுக்கான பிரச்சினைகளை அல்லது செயல்திட்டங்களை கூட கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் நஜிப் இந்திய சமுதாயத்திற்கு செய்ததை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகின்றது.

சுங்கத்துறை தலைமை இயக்குநராக டத்தோ சுப்பிரமணியத்தை நியமிக்கும் போது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அது அனைத்தையும் நிராகரித்து, அந்த பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தார் டத்தோஸ்ரீ நஜிப். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ஹராப்பான், ஜசெக இந்திய வாக்காளர்களை கவர வெற்று வாக்குறுதிகளை வழங்குவது வாடிக்கையாக நடக்கும் என்றார் அவர்.

2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு தேசிய முன்னணிக்கு திரும்பியது. அதற்கு பிரதமர் முன்னெடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். ஆனால் அதற்கு பிறகும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பிரதமர் நிறுத்திக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தேசிய செயல்திட்டத்தில் இந்தியர்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் பிரதமருக்கு ம.இ.கா. இளைஞர் பிரிவு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment