Tuesday 31 October 2017

'செடிக்' பணம்: 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்துள்ளா?

ரா.தங்கமணி

ஈப்போ-
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக செடிக் அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக இந்திய சமுதாயத்தை சென்றடைந்ததா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு சுதந்திரமடைந்தது முதல் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தேவைகளையும் அரசு அனுகூலங்களையும் மஇகா மட்டுமே நிர்வகித்து வந்தது. ஆனால் மஇகா அதனை முறையாக செய்யவில்லை என்பதால் இந்திய சமுதாயம் முன்னேற்றம் காணாமல் பின்தங்கியே கிடந்தது.

அந்த ஏமாற்றத்தின்  வெளிப்பாடே 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியாகும். அந்த பேரணியில் திரண்டு எதிரொலித்த மக்களின் குரலே மஇகாவையும் தேசிய முன்னணியையும் ஆட்டம் காணச் செய்தது.

அதன் பின்னர் டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இந்தியர் சமூக மேம்பாட்டு சிறப்பு செயலகத்தை (செடிக்) உருவாக்கி அதன் மூல  இந்திய சமுதாயம் மேம்பாடு காண்பதற்கான மானியங்களை ஒதுக்கினார்.
கடந்த 2014 முதல் 2017 வரை 230 மில்லியன் வெள்ளியை செடிக் அமைப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  5 லட்சம் இந்தியர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் எனவும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கூறியுள்ளார்.

உண்மையிலேயே செடிக்  அமைப்பிற்கு வழங்கப்பட்ட நிதி 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்துள்ளதா? என கேள்வி எழுப்பிய சிவகுமார், நாட்டிலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கின்ற சூழலில் இந்த தொகை நான்கில் ஓர் இந்தியரை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் சென்றடைந்ததா?
பொந்தோங் பொது மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பேரணி நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவகுமார், செடிக் பணம் எத்தனை இந்தியர்களை சென்றடைந்தது என கூட்டத்தில் இருந்த 5000 பேரை நோக்கி கேள்வி எழுப்புகையில் யாரும் 'ஆம்' பதிலளிக்கவில்லை.

இங்கு கூட்டத்தில் உள்ள ஓர் இந்தியரை கூட செ ன்றடையாத செடிக் பணம் 5 லட்சம் இந்தியர்களை சென்றடைந்தது என கூறுவது ஏமாற்று வேலையாகும்.
ஆதலால் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக அவர்களை சென்றடைந்தத? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என பேராக் ஜசெக துணைத் தலைவருமான சிவகுமார் கூறினார்.

பள்ளிகளில் குண்டர் கும்பல்; மூடிமறைக்க வேண்டாம்



கோலாலம்பூர்-
பள்ளிகளில் மாணவர்களிடையே நிலவும் குண்டர் கும்பல், பகடிவதை பிரச்சினைகளை மூடிமறைக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

குண்டர் கும்பல் பிரச்சினைகள் கடுமையாக கருதப்படுவதால் இதை தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது போலீஸ் துறையிடம் தெரிவிக்க பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும்.


இதனை மூடிமறைப்பதால் பின்னாளில் அது ஒரு சமுதாய பிரச்சினையாக உருவெடுக்கும். ஆதலால், பள்ளி நிர்வாகங்கள் இப்பிரச்சினை குறித்து புகார் அளிக்க தயக்கம் காட்டக்கூடாது என்றார் அவர்.
 

இந்திய சமுதாயத்திற்கான ஒதுக்கீடுகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம்

ஈப்போ-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018க்கான பட்ஜெட் ஓர் ஆக்ககரமானது ஆகும். இந்திய சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் வகையிலான பல திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளது என ஈப்போ பாராட் தொகுதி மஇகா துணைத் தலைவர் பாலையா வலியுறுத்தினார்.
இந்திய சமுதாயம் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக இந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். குறிப்பாக  அமானா சஹாம் பங்குகள், தெக்குன் கடனுதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு, அரசு- பொது பல்கலைக்கழகங்களில் 7% அதிகரிப்பு என பல நல்திட்டங்களை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் நமது வாழ்வாதாரத்தை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கார் ஓட்டுனர்கள் மோதல்- 6 பேர் கைது

செர்டாங்-
கார் விபத்தைத் தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் 40 வயது மதிக்கத்தக்க 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பூச்சோங் ஐ.ஓ.ஐ பேரங்காடி அருகே நிகழ்ந்தது.

டாமான்சாரா- பூங்சோங் நெடுஞ்சாலையில் (எல்டிபி) சாலையில்
டோயோட்டா வியோஸ் கார் ஒன்று, தனக்கு முன்னால் இருந்த புரோட்டோன் சத்ரியா காரின் மீது மோதியது. இதனால் அந்தக் கார் ஓட்டுபவர்களுக்கு இடையே சண்டை மூண்டது.  போலீஸ் அங்கு வருவதற்குள் அங்கு சண்டை முற்றிவிட்டது. இன்னும் சிலர் இவர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர்.

திடீரென்று சத்ரியா காரின் ஓட்டுனர் வேண்டுமென்றே தனது காரைப் பின் நோக்கிச் செலுத்தி, வியோஸ் காரை மோதினார். வியோஸ் கார் தன் காருக்கு பின்னால் இருந்த போலீஸ் காரின் மீது மோத நேர்ந்தது.

போலீசாரின் பேச்சையும் மீறி சண்டையைத் தொடர்ந்ததால் ஆறு பேரை கைது செய்து செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு மேல் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்று என செர்டாங் ஓசிபிடி மெகாட் முகமட் அமினுடின் தெரிவித்தார்.

Monday 30 October 2017

கேமரன் மலை விவகாரம்: கேள்வியை புறக்கணித்தார் டத்தோஶ்ரீ சுப்ரா


கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் பதில் ஏதும் கூறாமல் சென்றார்.
இத்தொகுதியில் போட்டியிட மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் ஆர்வம் காட்டி வரும் வேளையில் அங்கு களமிறங்கி பணி ஆற்றி வருகிறார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என டான்ஶ்ரீ கேவியஸ் குரலெழுப்பி வரும் நிலையில், மஇகாவின் தொகுதியான இங்கு மஇகா வேட்பாளரே களமிறக்கப்படுவார் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியமும் இதர மஇகா தலைவர்களும் கூறி வருகின்றனர்.
கேமரன் மலை தொகுதி குறித்து  மஇகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறேன் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறியுள்ளது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை புறக்கணித்ததோடு பதில் ஏதும் கூறாமல் கூட்டத்திலிருந்து விடை பெற்றார் டத்தோஶ்ரீ சுப்ரா.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மஇகாவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக மஇகாவிலிருந்து டத்தோஶ்ரீ பழனிவேல் நீக்கப்பட்டதால் அத்தொகுதி சுயேட்சையானது; சுயேட்சை தொகுதி என்பதால் அங்கு நான் போட்டியிட களப்பணி ஆற்றி வருகிறேன் என டான்ஶ்ரீ கேவியஸ் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசுத் துறை, பொது உயர்கல்விக்கூடங்களில் 7% ஒதுக்கீடு


கோலாலம்பூர்
அரசுத் துறைகளிலும் பொது உயர்கல்விக்கூடங்களிலும் இந்தியர்களின்  எண்ணிக்கை 7 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பிரதமர் நஜிப் கூறியுள்ளது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்வதாக அமையும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.
அரசுத் துறை, பொது உயர்கல்விக் கூடங்களில் இந்திய சமுதாயத்திற்கு 7% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என மஇகாவின் பொது பேரவைகளில் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்திய சமுதாயத்திற்கான முன்னேற்றமாகவே கருதப்படுகிறது என இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 மில்லியன் ஒதுக்கீடு


கோலாலம்பூர்-
பட்ஜெட் 2018இல் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை நவீனப்படுத்துவது, சீரமைப்பு, பழுது பார்த்தல் போன்றவற்றுக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் 900 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பையும் வசதிகளையும் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தால் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிறு வணிகர்களுக்கு வெ.50 மில்லியன் தெக்குன் கடனுதவி


கோலாலம்பூர்-
இந்திய சமூகத்தில் உள்ள சிறு வர்த்தகர்களை மேம்படுத்தும் வகையில் தெக்குன் கடனுதவிக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செடிக் அமைப்புடன் இணைந்து இந்திய தொழில் முனைவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டக் குழு இணைந்து சிறு வணிகர்கள் மேலும் வலுப்படுத்தப்படுவர் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அமானா சஹாம் பங்குகளை வாங்க வெ.5 ஆயிரம் கடனுதவி


பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்த பட்ஜெட் 2018இல் 1.5 பில்லியன் மதிப்பிலான யூனிட் டிரஸ்ட் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் மூலம் அமானா சஹாம் 1 மலேசியா எனப்படும் தலா 1 வெள்ளியாகும்.

இந்த பங்குகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து விடக்கூடாது எனும் நோக்கில் வசதியானவர்களுக்கு 30 ஆயிரம் பங்குகள் மட்டுமே ஒதுக்கப்படும். அதேவேளை பி40 பிரிவினர் இந்த பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக தகுதி வாந்ந்த ஒரு லட்சம் இந்தியர்களுக்கு தலா 5,000 வெள்ளி வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருக்கும் இந்தியக் குடும்பங்களில் 50 விழுக்காட்டினர் தங்களது சேமிப்பை உயர்த்த இது வழிவகுக்கும் என்றார் அவர்.

Sunday 29 October 2017

சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி எப்போது இடமாற்றம் காணும்?

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மஇகாவின் பாரம்பரிய தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய இடத்திற்கு மாற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தோட்டத்தில் வேலை செய்த பெரும்பாலான மக்கள் நகரத்திற்கு இடம் மாற்றலாகிச் சென்றதன் விளைவாக பெருமளவு மாணவர் எண்ணிக்கையில் சரிவு கண்ட தமிழ்ப்பள்ளியாக சாலாக் தமிழ்ப்பள்ளி திகழ்கிறது.

இந்த பள்ளி இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு புதிய இடத்தை அடையாளம் காணப்பட்டு அதற்கான உறுதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் புதிய இடத்திற்கு பள்ளியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது இங்குள்ள மக்களிடையே பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

2014இல் பிரதமர் துறை துணை அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி இந்த புதிய நிலத்திற்கான உறுதிக் கடிதத்தை நடப்பு தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவிடம் வழங்கியிருந்தார்.

கடந்த காலங்களில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டிருந்த இப்பள்ளியில் தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்களே பயில்கின்றனர். இத்தகைய சூழலில் பள்ளியை இடமாற்றம் செய்யாமல் இன்னமும் அமைதி காத்து வரும்  கல்வி அமைச்சின் நடவடிக்கை இங்குள்ள மக்களிடையே அருதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மஇகா இத்தொகுதியை மீட்டெடுப்பதற்கு இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இல்லையேல் இப்பள்ளி விவகாரம் கூட மஇகாவுக்கு எதிரான 'ஏவுகணை'யாக பாய்ச்சப்படலாம்.

பேராக் பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவம் அறிவிப்பு

ரா.தங்கமணி
ஈப்போ-
பக்காத்தான் ஹராப்பானின் பேராக் மாநிலத்திற்கான தலைமைத்துவப் பட்டியல் இன்று  அறிவிக்கப்பட்டது. தாமான் மேருவில் உள்ள பெர்சத்து கட்சியின் அலுவலகத்தில் பேராக் மாநிலத்திற்கான தலைமைத்துவம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்: 
- அஹ்மாட் ஃபைசால் டத்தோ அஸுமு

துணைத் தலைவர்கள்: 
- ஹாஜி அஸ்முனி அவி
- ஙா கோர் மிங்
- டாக்டர் முகமட் நூர் மனூட்டி

தலைமைச்  செயலாளர்:
- வி.சிவகுமார்

பொருளாளர்:
- இம்ரான் அப்துல் ஹமிட்

தகவல் பிரிவு இயக்குனர்:
- சாங் லி காங்

இளைஞர் பிரிவுத் தலைவர்:
- ஹஸ்முல் சுல்கர்னாய்ன் அப்துல் முனாய்ம்

மகளிர் தலைவி:
- வோங் மெய் இங்

செயலவையினர்:
- டத்தோஶ்ரீ முகமட் நிஸார் ஜமாலுடின்
- டத்தோ ஙே கூ ஹாம்
-வோங் கா வோ
- அப்துல் யூனுஸ் ஜமாரி
- டாக்டர் முஹைமின் சுலாம்
- டாக்டர் ஃபக்ருல்டின் முகமட் ஹசீம்
-  முகமட் இப்ராஜிம் ஹனீபா
-  முகமட் அஸ்னி முகமட் அலி
- முகமட் ஹபிஸ் முபின் முகமட் சாலே.

பட்ஜெட் 2018: நோய்கள் மீதான விழிப்புணர்வை துரிதமாக்குக

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மக்களவையில் தாக்கல் செய்துள்ள நிலையில் சுகாதாரத்திற்கான பல ஒதுக்கீடு திட்டங்கள் வரவேற்கக்கூடியதாகும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

இந்த சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டில் நோய்கள் குறித்த விழிப்புணர்வுக்கான சில ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படுவது அவசியமாகும். ஏனெனில் இன்று நோய்க்கான விழிப்புணர்வு மலேசியர்களிடையே குறைவாக உள்ளது.

அதனால்தான் நீரீழிவு நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறு உட்பட பல பிரச்சினைகளுக்கு மலேசியர்கள் இலக்காகின்றனர். நோய்கள் குறித்த விழிப்புணர்வை மலேசியர்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.

அதற்கேற்ற வகையில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிதியில் நோய்களுக்கான விழிப்புணர்வை இன்னும் துரிதப்படுத்துவதில் சுகாதார அமைச்சு தீவிரம் காட்ட வேண்டும் என மணிமாறன் வலியுறுத்தினார்.

பட்ஜெட் 2018: மக்கள் நலனை பிரதிபலிக்கவில்லை

கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ள பட்ஜெட் 2018  அடிமட்ட மக்களின் நலனை பிரதிபலிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா சாடினார்.

இந்த பட்ஜெட் 14ஆவது பொதுத் தேர்தலில் பிரபலமடைய வேண்டும் என்பதற்கான முயற்சியே ஆகும். மக்களின் வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய எத்தகைய நலத்திட்டங்களும் இதில் உள்ளடங்கவில்லை.

இன்றைய மக்களின் வாழ்வாதார நிலையை பிரதமர் நஜிப் உணர்ந்திருக்கவில்லை. மிக குறைந்த நிலையிலான வருமானத்தை பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளன.

குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் மக்கள் பல்வேறு சுமைகளுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலனை காக்கக்கூடிய இந்த பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமாக என்ன  உள்ளனது என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் நலனை பாதுகாக்காத பட்ஜெட்டாகவே இது உள்ளது என பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஶ்ரீ வான் அஸிஸா குறிப்பிட்டார்.

ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றம் - பிரதமருக்கு நன்றி

கோலாலம்பூர்-
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது என அக்கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட்டில் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கான பிரசவ கால விடுமுறை நீடிப்பு, பொது உயர்கல்விக் கூடங்களில் இந்திய சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு  அதிகரிப்பு,  பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான நலத் திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.
நாட்டின் ஆக்கசக்தியாக பெண்கள் உருவெடுக்கும் வகையில் அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐபிஎப் கட்சியில் பேரவையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஐபிஎப் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நன்றியை கூறிக் கொள்வதாக டத்தோ சம்பந்தன் தெரிவித்தார்.

லோரி- வேன் விபத்து; 9 பேர் பலி


தாப்பா-
ஒரு வேனும் ஐஸ் லோரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில்  9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  தாப்பா ஆயர் கூனிங் ஜாலான் பெசாரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வேனும் ஐஸ் லோரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.  22 வயதுடைய லோரி ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என தாப்பா மாவட்ட போலீஸ் தலைர் ஓசிபிடி சோம் ஆக் டின் கெலியாவ் தெரிவித்தார்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

Saturday 28 October 2017

பெஸ்தினோ: மேல் முறையீடு செய்வோம் - முதலீட்டாளர்கள் சூளுரை

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட  பெஸ்தினோ வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதால அதன் நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் எங்களின் போராட்டம் ஓயாது. இவ்வழக்கை மேல்முறையீடு செய்வோம் என நீதிமன்ற வளாகத்தில் பேசிய அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதிகளான சோங் யுக் மிங், சோங் குய்க் கே உட்பட நால்வர் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வேளையில் தற்போது பங்குகளை வாங்கியது நிறுவனத்திடம் தான். ஆதலால் வழக்கு நிறுவனத்தின் மீதுதான் தொடுக்க முடியுமே தவிர தவிர தனிநபர்கள் மீது அல்ல என தீர்ப்பில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

வழக்கு தொடுக்கப்பட்ட பிரதிவாதிகள் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். ஆதலால் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சாராம்சம்  புரிந்து கொள்ள முடியவில்லை என அவர்  சொன்னார்.

இதனிடையே, இந்த வழக்கை விஜய், கண்ணையா, பாலகிருஷ்ணன், கோபால நாயர்,கோபாலன் ஆகியோர் தொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் 2018: பிரிம் தொகையில் மாற்றமில்லை



 


கோலாலம்பூர்-

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரிம் உதவித் தொகையில் மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்தார்.

3,000 வெள்ளிக்கும் கீழ் குடும்ப வருமானம் பெறுபவர்களுக்கு வழக்கம்போல் 1,200 வெள்ளி பிரிம் உதவித் தொகை வழங்கப்படும்.

அதோடு, 3,000 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளி வருமானம் பெறுபவர்களுக்கு 900 வெள்ளியும் திருமணமாகாவதர்களுக்கு 450 வெள்ளியும் பிரிம் உதவித் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.