ரா.தங்கமணி
இந்திய சமுதாயத்தில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்ற விவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நாம், அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கான மக்கள் பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பார்களா? என்பதை பற்றி சிந்திக்க மறுக்கிறோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.
இந்திய சமுதாயத்தை இன்று சூழ்ந்திருக்கும் ஏழ்மையால் மக்கள் தொகையில் நாம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறோம்.
நமது மக்கள் தொகையை காட்டிலும் இந்தோனேசியர், அந்நிய நாட்டுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாம் இன்னும் சமுதாய மேம்பாடு காணாமல், ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தோமானால் வரும் காலம் இந்திய சமுதாயம் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கலாம்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது 4 அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் பதவி இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது.
ஆனால் இன்றைய அரசாங்கத்தில் ஓர் அமைச்சர் பதவி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி போராட்டத்தை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்கும் நாளைய சமுதாயத்தை பற்றி சிந்திக்க தவறுகிறோம்.
சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினையென்றால் ஆளும்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் அதிலுள்ள இந்திய பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து போராட தவறுகிறோம்.
இந்த பிரிவினைவாதம் தான் வரும்காலத்தில் இந்தியரை பிரதிநிதிக்க மக்களவையில் ஒருவர் கூட இல்லாத துரதிர்ஷ்ட சூழலை உருவாக்கி விட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.
மக்கள் நீதி கட்சியின் ஏற்பாட்டில் 'அட்சயப் பாத்திரம்' எனும் தலைப்பில் இணையம் வழி நடத்தப்பட்ட நேர்காணலில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.
பிகேஆர் கட்சியின் தினேஷ் செல்வராஜு வழிநடத்திய இந்த நேர்காணலில் ஜொகூர் மாநில பிகேஆர் கட்சியின் பொருளாளர் சுப்பிரமணியம் மற்றொரு பேச்சாளராக கலந்து கொண்டார்.