Friday 1 June 2018

'ஜிஎஸ்டி இல்லாத மலேசியா'; கொண்டாட காத்திருக்கும் மலேசியர்கள்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கேற்ப நாளை ஜூன் 1 முதல் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 0 % ஆக குறைத்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அமலாக்கத்திற்கு கொண்டு வரபட்ட ஜிஎஸ்டி வரியால் (6%) மக்கள் விலையேற்றத்தை பெரும் சுமையாக கருதியதோடு குறைந்த வருமானத்தில் பெரும் மனச்சுமைக்கு ஆளாகினர்.

நாளை ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இல்லாத மலேசியாவை கொண்டாட காத்திருக்கும் மலேசியர்கள் சில தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. வரி விதிப்பு இல்லாத பொருட்கள்

- ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி 0% குறைக்கப்பட்டுள்ளதோடு எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படவுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் வரி ஏதும் விதிக்கப்படாத 'நுகர்வோர் சந்தையை' பயனீட்டாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜிஎஸ்டி வரி அகற்றப்படுவதால் வாகனங்களின் விலை வெகுவாக குறையலாம் என சில வாகன நிறுவனங்கள் அறிவித்திருப்பது மலேசியர்களுக்கு கொண்டாட்டமாகவே உள்ளது.
2. பொருட்களின் விலையை சரி பார்க்க வேண்டும்

- 6% நிர்ணயிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி நீக்கப்படுவதால் நாளை முதல் பொருட்களை வாங்கும் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விலை பட்டியலை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்பதை பயனீட்டாளர்கள் ஆராய வேண்டும். தங்களது விலை பட்டியலில் GST என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் 0% இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

3. ஜிஎஸ்டி வரி விதிக்கும் வணிகர்களுக்கு எதிராக புகார் அளிப்பது

- ஜிஎஸ்டி வரி 0% என அறிவிக்கப்பட்ட பின்னர் வணிகர்கள் யாரேனும் ஜிஎஸ்டி வரி விதித்தால் மக்கள் அதற்கு எதிராக புகார் அளிக்கலாம்.
உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை (KPDNKK) அலுவகத்தில் புகார் அளிக்கலாம்.

* 1 Malaysia One Call Centre மையத்தின் +603-80008000 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

4. வணிகர்கள் கண்காணிக்கப்படுவர்

- ஜிஎஸ்டி வரி 0% குறைக்கப்படுவதைத் தொடர்ந்து வணிகர்கள் சட்டவிதிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். விதிகளை மீறி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு எதிராக சுங்கவரி துறை நடவடிக்கை எடுக்கலாம்.

No comments:

Post a Comment