Sunday 24 June 2018

நில ஒதுக்கீடு நிச்சயம் செய்து தரப்படும் - சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் மேம்பாட்டுக்காக நில ஒதுக்கீடு செய்யப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இந்த கூட்டுறவுக் கழகம் மிகச் சிறப்பாக இயங்கி வருவதோடு தனது உறுப்பினர்களுக்கு லாப ஈவு தொகையை வழங்கி வருகிறது. சிறிய கழகமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று இந்த கூட்டுறவு கழகம் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் இதற்கு நிலம் ஒதுக்காத தேமு அரசாங்கம் வெறும் தொகுதி அளவிலேயே செயல்படும் தேசிய பள்ளியின் கூட்டுறவு கழகத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

தொகுதி அளவிலே செயல்படும் கூட்டுறவு கழகத்திற்கு 500 ஏக்கர் ஒதுக்க முடிந்த தேமு அரசாங்கம் மாநில அளவில் செயல்படும் பேரா மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்திற்கு நிலம் ஒதுக்காதது ஏன்?
இந்த கூட்டுறவுக் கழகம் இன்னும் சிறப்புடன் செயல்படுவதற்கு ஏதுவாக மாநில அரசு நிலம் ஒதுக்குவதற்கு பரிந்துரை செய்வதாக கூறிய சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், இந்த கழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 15 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படும் என இன்று நடைபெற்ற இக்கூட்டுறவுக் கழகத்தின் 54ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டுறவுக் கழகத்தின்  வளர்ச்சிக்கு ஏதுவாக மாநில அரசு நிலம், மானியம் வழங்க வேண்டும் என அதன் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சுப.சற்குணன், கூட்டுறவுக் கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment