Thursday 28 June 2018

நஜிப் வீட்டில் கைப்பற்ற பணம், பொருட்களின் மதிப்பு வெ.1 பில்லியன் - டத்தோஶ்ரீ அமர் சிங்

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மீட்கப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு 1.1 பில்லியன் வெள்ளியை தாண்டும் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர் டத்தோஶ்ரீ அமர் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் கடந்த சோதனை மேற்கொண்ட போலீசார் பணம், விலையுயர்ந்த நகைகள், கை கடிகாரம், கைப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மதிப்பீடு செய்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு வெ. 900 மில்லியன் முதல் வெ.1.1 பில்லிய்ன் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.

இதில்  37 வகையான 567 கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டது மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல் ஆகும். அனைத்து கைப்பைகளின் மதிப்பு 51.3 மில்லியன் வெள்ளியாகும். இதில் 'பிஜியான்' வகையைச் சேர்ந்த ஒரு கைப்பை விலை மட்டும் 1.6 மில்லியன் வெள்ளியாகும்.

தாமான் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீட்டில் 35 பைகளில் கைப்பற்ற 26 வகையான நோட்டுகளின் மொத்த மதிப்பு வெ.116.7 மில்லியன் ஆகும்.

மேலும், 25பைகளில் கைப்பற்றப்பட்ட சங்கிலி, கை வளையல், தோடு, ஆடை ஊசி, தலைப்பாகை ஊசி, மோதிரம் என  12,000 வகையான  தங்க நகைகளின் மதிப்பு வெ. 440 மில்லியன் ஆகும். இதில் வெ. 6.4 மில்லியன் மதிப்புடைய  ஒரு சங்கிலியும் உள்ளடங்கும்.

இதில் கைக்கூலி ஊதியம் சேர்க்கப்படவில்லை என்பதோடு சந்தை விலையில் 50% முதல் 100% குறைவாக வாங்கப்பட்டுள்ளது. இதை அனைத்தையும் சேர்த்தால் அதன் மொத்த மதிப்பு வெ.660 மில்லியன் முதல் வெ.880 மல்லியன் வரை இருக்கும்.

100 வகையான 423 கைகடிகாரங்களின் மதிப்பு வெ. 78 மில்லியன் ஆகும். அதோடு 234 மூக்குக் கண்ணாடியின் மதிப்பு வெ. 374,000 ஆகும் என அவர் சொன்னார்.

150 போலீஸ்காரர்கள், நிபுணர்களைக் கொண்டு 8 சிறப்பு குழுக்களை உருவாக்கி கடந்த மே 21 முதல் ஜூன் 21 வரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

பேங்க் நெகாராவைச் சேர்ந்த 22 அதிகார்களைக் கொண்டு பணம் எண்ணும் 6 இயந்திரங்களின் உதவியுடன் 3 நாட்களாக மொத்த பணத்தையும் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இவ்வளவு நாள் காலதாமதம் ஏற்பட்டது என குறிப்பிட்ட அவர், இப்போது நஜிப் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பப்பட்ட போது 'அதனை நாங்கள் செய்ய மாட்டோம்' என்றார்.

ஆயினும், பண மோசடி எதிர்ப்பு சட்டம், 2001 பயங்கரவாத நிதி ஒழிப்பு,  சட்டவிரோத நடவடிக்கை வருவாய் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள டத்தோஶ்ரீ நஜிப், அவரது துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரை போலீசார் அழைப்பர் என அவர் சொன்னார்.

கைப்பற்ற பணம், நகைகள் யாவும் பேங்க் நெகாராவில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment