Thursday 21 June 2018

எதிர்க்கட்சியாக இருந்து திறம்பட செயலாற்றுவோம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிவை அடுத்து இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள மஇகாவை அடுத்த தேர்தலுக்கு தயார்படுத்த வலுவான ஒரு தலைமைத்துவம் அவசியம் என்பதை கட்சியினர் உணர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மஇகா தற்போது நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேமு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகா இப்போது தன்னை வலுபடுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாம் இப்போது எதிர்க்கட்சியாகி விட்டோம். எதிர்க்கட்சியாய் இருந்தவர்கள் ஆளும் கட்சியாக மாறியுள்ளனர். இப்போது நாம் செய்ய வேண்டியது எதிர்க்கட்சி வேலையை தான்.  முன்பு எதிர்க்கட்சியாய் இருந்தவர்கள் என்ன வேலையை செய்தார்களே அதையே தான் நாம் இப்போது செய்யவிருக்கிறோம்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதால் சிலர் ம இகாவிலிருந்து வெளியேறி பிற கட்சிகளுக்கு செல்லலாம். அதை நாம் குறை சொல்லவில்லை. தற்போது 6 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள மஇகாவில் உறுப்பினர் எண்ணிக்கை 1 லட்சமாக சரிந்தாலும் கட்சியை வலுபடுத்து அடுத்த தேர்தலை துணிவுடன்  எதிர்கொள்வோம்.

இந்தியர்களின் ஆதரவு பெற்ற கட்சியாக மஇகா மீண்டும் உருவெடுக்க சிறந்த தலைமைத்துவம் அவசியம் என்பதால் வரும் கட்சித் தேர்தலில் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனக்கு கிளைத் தலைவர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என நேற்று பேரா மாநிலத்திலுள்ள கிளைத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment