Sunday 17 June 2018

மலேசிய இந்தியர்களின் தனிப்பெரும் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன்


(குறிப்பு: துன் வீ.தி.சம்பந்தனின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது)

மலேசிய இந்தியர்களின் அரசியல்,  வாழ்வியல் வரலாற்றை பேச வேண்டுமானால் அதில் நிச்சயம் துன் வீ.தி.சம்பந்தன் எனும் தனிப்பெரும் தலைவரின் பெயரும் இடம்பெற்றிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அயராத உழைத்த துன் வீ.தி.சம்பந்தன் இந்நாட்டில் இந்தியர்களின் அரசியல் உரிமைக்கும் வித்திட்டவர் எனலாம்.

மலேசிய இந்தியர்களில் நாட்டில் முதல் “துன்” எனும் உயரிய அங்கீகாரத்தை பெற்ற முதல் தமிழர் துன் வீ.தி.சம்பந்தன் என்பது பெருமிதமானது. ம.இ.கா எனும் மலேசிய இந்தியர் காங்கிராஸ் தொடங்கப்பட்டு அதன் ஐந்தாவது தேசியத் தலைவராக தலைமையேற்ற துன் சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் வாழ்வாதார உரிமைக்காக அரசியல் ரீதியில் பெரும் நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி உபசரிப்பின்போது துன் சம்பந்தன் வீட்டிற்கு
முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வருகை புரிந்தபோது...
துன் சம்பந்தனுக்கு முன்னதாக மஇகாவில் நான்கு தலைவர்கள் தலைமையேற்றிருந்த போதிலும் துன் சம்பந்தன் தலைமையேற்றதிலிருந்தே மஇகா மறுமலர்ச்சியை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சுங்கை சிப்புட் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் துன் சம்பந்தனுக்கு மலேசிய இந்தியர்களின் மனங்களில் தனியோர் இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியில் தனியொரு சிறப்பினை பெற்றிருக்கும் துன் சம்பந்தன் நாம் நேசிக்கும் மலேசிய நாட்டின் சுதந்திரத்திற்காக சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்ட பெருமைக்குரியவர்களில் ஒருவராவார்.

அரசியலில் சொத்து சுகம் சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் செல்வந்தராக அரசியலில் கால் பதித்து எளிமையாக வாழ்ந்து  மக்கள் மனங்களை கவர்ந்த பெரும் கோடீஸ்வரர் 'துன்' சம்பந்தன் என்றுதான் சொல்ல வேண்டும். தனது பணம்,பொருள்,செல்வம் உட்பட குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் மலேசிய இந்திய சமூகத்திற்காக அர்ப்பணிப்பு செய்த துன் சம்பந்தன் ஏழைகளின் தோழனாகவே வாழ்ந்து மறைந்தார். இவர் 'மலேசியாவின் காமராசர்' என்றும் இன்றளவும் புகழப்படுகிறார்.

மலேசியாவிற்கு சஞ்சிக்கூலியாக கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் கூலிகளாகவே வாழ்ந்து வரலாறு படைத்து விடக்கூடாது.முதலாளிகளாய் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக தோட்டங்கள் துண்டாடல் செய்யப்பட்டபோது வீடு வீடாகச் சென்று பத்து பத்து வெள்ளியாக சேகரித்து தோட்டங்களை வாங்கி இந்திய சமுதாயத்தை பொருளாதார ரீதியில் உயர்த்திட பெரும் பங்காற்றினார் இவர்.
கட்டுரையாள கி.மணிமாறன்
1960இல் தொடங்கப்பட்ட தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் வாரிய தலைவராக துன் சம்பந்தன் பொறுப்பேற்ற பின்னர் தொடங்கி இன்றைய வரை அச்சங்கம் மிகவும் திறன்பட செயல்பட்டு வருகிறது. அதற்கு அன்றைக்கு துன் சம்பந்தன் போட்ட விதைதான் இன்று ஆழமரமாய் விருட்சம் கொண்டுள்ளது என்றால் அஃது மிகையல்ல.
மலாயாவின் சுதந்திர பிரகனடத்தில்
கையெழுத்திட்ட நாடு திரும்பியபோது...
துன் சம்பந்தன் அச்சங்கத்தின் வாரிய தலைவராக தலைமையேற்ற காலக்கட்டத்தில் அவரது அயராத உழைப்பிலும் விவேகமான தூரநோக்கு சிந்தனையாலும் 1970ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. துன் சம்பந்தனின் காலக்கட்டத்தில் அச்சங்கத்திற்கு 18 ரப்பர் தோட்டங்கள் இருந்த வேளையில் அதில் சுமார் 85,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை சிப்புட்டில் மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை 1954இல் நிறுவிய துன் சம்பந்தன் அப்பள்ளியினை திறந்து வைக்க ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டை அழைத்தும் வந்தார் என்பது வரலாற்று குறிப்பு. நாட்டில் இந்திய சமுதாயத்திற்கு துன் சம்பந்தன் ஆற்றிய பெரும் பங்கின் சான்றாகத்தான் அவரது பெயரில் தமிழ்ப்பள்ளிகளும், சாலைகளும், கட்டட்டங்களும் இன்றளவும் மெய்பித்துக் கொண்டிருக்கிறது.
துன் சம்பந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ள பிரீக்பீல்ட்ஸ் சாலை
இந்தியர்களின் அரசியல் உரிமைக்காக தொடங்கப்பட்ட மஇகாவின் ஐந்தாவது தலைவராக தனது 36வது வயதில் தலைமையேற்ற துன் சம்பந்தன் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். அவர் தலைவராக தலைமையேற்றபோது வெறும் 35 கிளைகள் மட்டுமே இருந்த மஇகாவிலிருந்து துன் சம்பந்தன் பதவி விலகும் போது சுமார் 300 கிளைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 18ஆண்டுகளில் 300 கிளைகள் என்பது அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சாதனையே.
நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு
நினைவுச் சின்னம் வழங்கும் துன் சம்பந்தன்
மலேசியாவில் இந்தியர்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொடுத்த துன் சம்பந்தன் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் அயராமால் சிந்தித்துக் கொண்டு அதனை செயல்படுத்திக் கொண்டும் இருந்தார். அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட துன் சம்பந்தனை போற்றி மதிக்காத அரசியல்வாதிகள் மலேசியாவில் இல்லை எனலாம். இந்தியர்கள் மட்டுமின்றி பிற இனத்தவர்களிடமும் தனித்துவ அடையாளத்துடன் மிளிரும் துன் சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் மாபெரும் அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமைக்கும் சேவைக்கும் அன்பிற்கும் பண்பிற்கும் சமூக அர்ப்பணிப்பிற்கும் முன்மாதிரியாக விளங்கிய துன் சம்பந்தன் என்றும் மலேசிய இந்தியர்களின் மனங்களில் வாழும் பொக்கிஷம் என்பது காலத்தால் அழியாத சுவடு.
பிரீக்பில்ட்சில் அமைந்துள்ள துன் சம்பந்தன் வளாகம்
நேற்றைய தலைமுறையும் இன்றைய தலைமுறையும் நேசித்து மதிக்கும் துன் சம்பந்தன் நாளைய தலைமுறைக்கும் சிறந்த வரலாற்று முன்மாதிரி தலைவர் என்றால் மறுப்பதற்கில்லை. அவர் காலத்தை வென்ற மலேசிய தமிழன் என்பதில் ஐயமில்லை. அவரது பிறந்த நாளில் அவரது வாழ்வியல் முன்மாதிரிகளை நாம் நமது வாழ்க்கை தத்துவமாய் பின்பற்றி நாட்டுக்கும் மக்களுக்கும் தனித்துவமிக்க மனிதராக உயிர்ப்பிக்க உறுதிக்கொள்ள வேண்டும்.

துன் சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் உரிமைகளை காத்திட்ட பெரும் தூண். மலேசிய இந்தியர்களின் அரணாக விளங்கிய துன் சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் வரலாற்று பொக்கிஷம் என்பதில் மலேசியர்கள் எனும் ரீதியில் நாம் பெருமை கொள்வோம்.அவரது பாணியில் புதியதொரு சமூகம் செய்வோம்.

எழுத்து: கி. மணிமாறன், சுங்கை சிப்புட்.


No comments:

Post a Comment