Tuesday 12 June 2018

'நஜிப் மீதான கைது நடவடிக்கை இப்போது இல்லை'- துன் மகாதீர்

தோக்கியோ-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வலுவான ஆதாரங்கள் திரட்டப்படும் வரையில் அவர் கைது செய்யப்பட மாட்டார் என பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.

'அவர் (நஜிப்) கைது செய்யப்படுவதை பலர் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் வலுவான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  இல்லையேல் அக்குற்றச்சாட்டில் அவர் வெற்றி பெற்று விடுவார்; நாம் தோற்று விடுவோம்.

நீதிமன்ற நடவடிக்கையில் அவர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவருக்கு ஒரு குற்ற உணர்ச்சியே இருக்காது.  நாம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் திசை திருப்பப்பட்டு வாக்காளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவோம் என ஜப்பானில் வசிக்கும் மலேசியர்களுடனான விருந்துபசரிப்பில் பேசுகையில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

கடந்த தேசிய முன்னணி அரசாங்கம்  செய்ததை போல பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதை புறந்தள்ளியுள்ளது. நீதித் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால்தான் ஜனநாயகம் காக்கப்படுவதோடு மக்களின் தேர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும் என அவர் சொன்னார்.

ஜப்பானில் நடைபெற்று வருக் 'ஆசியாவின் எதிர்காலம்' எனும் 24ஆவது அனைத்துலக மாநாட்டிற்கு வருகை தந்துள்ள துன் மகாதீருடன் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலியும் உடன் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment