Sunday 24 June 2018

இன்னமும் எதிர்க்கட்சியாய் செயல்பட முனையாத 'தேசிய முன்னணி'?

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து 2 மாதங்களை கடக்கின்ற நிலையில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பல அதிரடி திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

ஆனால் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ள தேசிய முன்னணி இன்னமும் தன்னை எதிர்க்கட்சியாக தயார்படுத்த தொடங்கவில்லை என்றே தற்போதைய நிலை உணர்த்துகிறது.

பொதுத் தேர்தலில் வாங்கிய பலமான 'அடி'க்கு பின்னர் தேசிய முன்னணி கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. 13 கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியில் தற்போது 4 கட்சிகள் (அம்னோ,மஇகா, மசீச, கெராக்கான்) மட்டுமே உள்ளன.

இதில் அம்னோவும், மஇகாவும் தற்போது கட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

வரும் 30ஆம் தேதி அம்னோவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதால் இதில் போட்டியிடுகின்ற முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, முன்னாள் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஜூலை மாத இறுதியில் மஇகாவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதால் யார் போட்டியிடுவர், யாரை ஆதரிப்பது போன்ற கேள்விகளுக்கு மத்தியில் மஇகாவினர் மூழ்கிக் கிடக்கின்றனர்.

மஇகாவின் நடப்பு தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் கட்சி தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என முன்பு அறிவித்ததால் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்து, அதற்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கட்சி தேர்தலை மையப்பட்டு இவ்விரு செயல்படுவதாலும் மசீசவும் கெராக்கானும் சில சமயங்களில் மட்டுமே குரல் கொடுப்பதாலும் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய தேசிய முன்னணி 'இன்னமும் அதற்கு தயாராகவில்லை' என்றே கருதப்படுகிறது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் கூட்டணி பொதுத் தேர்தல் முடிந்த கையோடு தான் ஒரு வலுவான எதிர்க்கட்சி என்பதை உறுதிபடுத்தும் வகையில் பல பதிலடி தாக்குதல்களையும் திட்டங்களையும் மேற்கொண்டன.

ஆனால் தற்போது எதிர்க்கட்சி கூட்டணியான தேசிய முன்னணி இன்னமும் தாம் 'ஆளும் கட்சி' என்ற நிலையிலேயே செயல்பட்டு வருவதோடு அதன் நடவடிக்கைகள் எதிர்க்கட்சியின் வேகத்தை பிரதிபலிக்கவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

No comments:

Post a Comment