Friday 29 June 2018

சொஸ்மா சட்டம்; மறு ஆய்வு செய்க - மலேசியத் தமிழர் குரல் கோரிக்கை

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் 'பிணை'யில் வெளியே வர முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்படுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ள 'சொஸ்மா' சட்டத்தை நடப்பு அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மலேசியத் தமிழர் குரல் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் 31.7.2012  முதல் 22.2.2017 வரை அனைத்து இனங்களையும் சார்ந்த 979 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டர் கும்பல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அதன் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.

ஐ.எஸ்.ஏ. எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிணையில்  வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

கொலை செய்பவர்களுக்கு கூட 'பிணை' வழங்கப்படும்போது  இவர்களுக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கம் இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என்றார்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் 'பிணை'யில் வெளியே வர முடியாததால் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணி உணர வேண்டும் என்றார் அவர்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேராவில் கைது செய்யப்பட்ட 36 பேரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment