Friday 15 June 2018

தேமு தலைவர்களாக 'மாறும்' பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகள் - ஆதங்கப்படும் மக்கள்

ரா.தங்கமணி

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகி விட்டது. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சிக்கு விடை கொடுத்து நம்பிக்கைக் கூட்டணியை (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சி கட்டிலில் அமர வைத்து  அதன் தலைமைத்துவம் பல அதிரடி திட்டங்களை முன்னெடுப்பதையும் மலேசியர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகளின் மீதான எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் மேலோங்கியே காணப்படுகிறது.

ஆனால் மக்கள் எதிர்ப்புக்கு மாறாக பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தேசிய முன்னணி மக்கள் பிரதிநிதியை விட 'கொஞ்சம் ஓவராக' பந்தா காட்டி கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

முன்பு எதிர்க்கட்சியாய் இருந்த சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைப்பேசி அலறினாலே உடனே பதிலளிப்பர். ஆனால் தற்போது மக்கள் தொடர்பு கொண்டாலும் கூட பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வலுக்கிறது.

"Missed Call" இருந்தாலும் கூட மறுபடியும் தொடர்பு கொண்டு மக்கள் பிரச்சினைகளை கேட்டறியும் அவர்கள், இப்போது பல முறை தொடர்பு கொண்டாலும் பயனில்லை என்ற அவலம்தான் நிலவுகிறது.

மேலும், சில மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் வரும் மக்கள் சந்திப்பு, பொது நிகழ்வுகளுக்கு கூட 'மோட்டார், வாகன அணிவகுப்புடன் ஒரு கூட்டம் புடைசூழ' நிகழ்வு இடங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய முன்னணித் தலைவர்கள்தான் இப்படி 'பந்தா' காட்டிக் கொண்டு மக்களை நெருங்காமல் இருந்தார்கள் என்றால், தற்போது ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே 'தேமு தலைவர்கள்' போல் மாறும் பக்காத்தான் ஹராப்பான்  பிரதிநிதிகளை கண்டு மக்கள் ஆதங்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

(குறிப்பு: இது சிலருக்கு மட்டுமே; புரிந்தவர்கள் உணர்ந்தால் சரி...)

No comments:

Post a Comment