Sunday, 3 June 2018

மைபிபிபி கோரிய ஒரு தொகுதியில் மட்டுமே தேமு வெற்றி பெற்றது- டான்ஶ்ரீ கேவியஸ் தாக்கு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு மைபிபிபி கோரிய ஒரே தொகுதியில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் தேமு கண்டுள்ள தோல்வி ஒரு படிப்பினையாகும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் கேமரன் மலையில் போட்டியிட மைபிபிபி தேசிய முன்னணியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அங்கு கடந்த 4 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த போதிலும் அங்கு தனக்கு போட்டியிட தேமு வாய்ப்பளிக்காமல் மஇகாவுக்கே அந்த தொகுதி வழங்கப்பட்டது.

மேலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட மைபிபிபி கோரிக்கை விடுத்தது. கேமரன் மலை, நிபோங் தெபால் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கோத்தா அலாம் ஷா, புந்தோங், தேஜா, பாலோ, கோத்தா லக்‌ஷ்மணா, மானிக் உராய் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட மைபிபிபி முனைந்தது.

ஆனால், மைபிபிபி  கோரிய எந்த தொகுதிகளையும் ஒதுக்காமல் அந்த தொகுதிகளில்  தேமு பங்காளி கட்சிகள் போட்டியிட்டன. இதில் கேமரன் மலையை தவிர மற்ற தொகுதிகளில் தேமு தோல்வியையே சந்தித்தது.

கேமரன் மலையில் தேமு வெற்றி பெற்றததற்கு தான் மேற்கொண்ட 4 ஆண்டுகால சேவையும் ஓர் அடிப்படை காரணமாகும் என டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.

சேவைகள் மட்டுமே மக்களைச் சென்றடைய ஒரே வழி என்பதை தேசிய முன்னணி இனியும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். 14ஆவது பொதுத்  தேர்தலில் தேமு அடைந்த தோல்வி, பலவீனத்தை ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார் அவர்.

இதனிடையே, தேமுவின்  பங்காளி கட்சியாக இடம்பெற்றிருந்த மைபிபிபி அக்கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதாக டான்ஶ்ரீ கேவியஸ் அண்மையில் அறிவித்திருந்தார்.

No comments:

Post a Comment