Friday 1 June 2018

தூத்துக்குடி 'கலவரம்' எதிரொலி; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு காட்டிய மலேசியர்கள்

ரா.தங்கமணி

புத்ராஜெயா-
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது போராட்டம் நடத்தி துப்பாக்கியால் சுட்டு 13 பேர் மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக இன்று மலேசியாவுக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மலேசியத் தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று புத்ராஜெயாவில் ஒன்று திரண்ட 25 பொது இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நரேந்திர மோடி மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது சந்திக்கக்கூடாது என  குரலெழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் பலியானதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆனால் அச்சம்பவத்திற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் வேறு நாடுகளுக்கு பறக்கும் நரேந்திர மோடிக்கும் மலேசிய அரசு முகம் கொடுக்கக்கூடாது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, தமிழர்கள் மீது மட்டுமல்லாது குஜராத், காஷ்மீரில் நிகழும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமலும் முஸ்லீம் சிறார்கள் மீது (ஆசிபா) தொடரும் பாலியம் வன்கொடுமைகளுக்கு எவ்வித தீர்வு காணாமலும் இருக்கும் நரேந்திர மோடியின் வருகையை  மலேசியத் தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்க்கின்றோம் என  இன்றுக் காலை நிகழ்ந்த எதிர்ப்பபுப் போராட்டத்தை ஒருங்கிணைத்த மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் வியூக இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

தற்போதைய பக்காத்தான் ஆட்சி மலேசியர்களின் புது நம்பிக்கையில் உருவான ஆட்சியாகும். இத்தகைய ஆட்சி மக்களின் உணர்வுகளை புரிந்திடாத நரேந்திர மோடி போன்ற தலைவர்களுக்கு வரவேற்பு நல்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் இயக்கங்கள் உட்பட 44 பொது இயக்கங்களும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment