Sunday 13 May 2018

கட்சி தாவல்; விலக்கப்பட்ட கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது


ரா.தங்கமணி

ஈப்போ-
2008ஆம் ஆண்டு நிகழ்ந்த 'இந்தியர் சுனாமி'யில் மக்கள் கூட்டணி வசம் வீழ்ந்த பேரா மாநில ஆட்சி உரிமையை தட்டி பறித்த தேசிய முன்னணி இன்று அதற்கான தண்டனையை பெற்றுள்ளது.

கடந்த 12ஆவது பொதுத் தேர்தலில் பேரா மாநில ஆட்சியை கைப்பற்றியது மக்கள் கூட்டணி.31 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த மக்கள் கூட்டணி மூவரின் கட்சி தாவலால் ஆட்சியை தேசிய முன்னணியிடம் இழக்க நேரிட்டது.

மத்திய அரசாங்கத்தை கைப்பற்றிய தேசிய முன்னணி தனது அதிகார பலத்துடன் பேராவில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இது பேரா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய பேரா சுல்தான் அஸ்லான் ஷாவின் வாகனத்தை மறிக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை கவிழ்க்க தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்திய தேசிய முன்னணி, இன்று அதே பதவி அதிகாரத்தை பேராவில் தண்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றிய நிலையில் பேரா மாநில ஆட்சியை அமைக்க பக்காத்தான் கூட்டணி தடுமாறியது.

29 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பக்காத்தான் கூட்டணி வென்ற நிலையில் 27 சட்டமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணியும் 3 சட்டமன்றத் தொகுதிகளை பாஸ் கட்சியும் கைப்பற்றின.

பாஸ் ஆதரவுடன் பேரா மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என தேசிய முன்னணி அறிவித்திருந்த நிலையில் இன்று இரு தேமு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததன் விளைவாக 31 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் பேரா மாநில ஆட்சியமைக்கிறது பக்காத்தான் ஹாரப்பான்.

கட்சி தாவல் மூலம் எந்த கட்சி ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டதோ இன்று அதே கட்சி தாவல் மூலம் விலக்கப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

2009இல் விலக்கப்பட்ட பக்காத்தான் கூட்டணி இன்று 2018இல் மீண்டும் ஆட்சியமைக்கிறது.

No comments:

Post a Comment