கோலாலம்பூர்-
1எம்டிபி விவகாரம் தொடர்பில் தொடர்புடைய 12 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற புதிய அரசாங்கம் அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் தடை விதித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்திருந்தன. 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினால் 1எம்டிபி விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதி வழங்கியது.
அதன்படி 1எம்டிபி விவகாரத்தை தூசு தட்டப்பட்டுள்ள நிலையில் 1எம்டிபி விசாரணைக்கு உதவும் பொருட்டு அவ்விவகாரம் தொடர்புடைய 12 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்திஶ்ரீ ரோஸ்மா மன்சோர், 1எம்டிபி மேம்பாட்டு நிறுனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஶ்ரீ இஸ்மி இஸ்மாயில், 1எம்டிபி முன்னாள் வாரியக்குழு உறுப்பினர் டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹல்மி, 1எம்டிபி தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, அட்டெர்னி ஜெனரல் டான்ஶ்ரீ முகமட் அபாண்டி அலி, முன்னாள் ஐஜிபி டான்ஶ்ரீ காலிட் அபு பக்கார், கருவூல மைய தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, எம்ஏசிசி முன்னாள் தலைமை ஆணையர் சூல்கிப்ளி அஹ்மாட், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென். பெர். நிர்வாக இயக்குனர் நிக் ஃபைசால் அரிஃப் கமில், நஜிப்பின் மகன் அஸ்மான் ரசாக், வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படும் வகையில் அவர்களின் பயண கடப்பிதழ் 'கறுப்பு பட்டியல்' இடப்பட்டுள்ளது.
மேலும் 64 நிலங்கள் 4.28 பில்லியனுக்கு விற்கப்பட்டது தொடர்பில் எம்ஏசிசி விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அதற்கு உதவும் பொருட்டு கூட்டரசுப் பிரதேச முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment