Thursday 24 May 2018

ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி உடனடி ரத்து


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநில ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி இன்று முதல் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த கால தேசிய முன்னணியின் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட 327 ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி இன்று முதல் முடிவுக்கு வருவதாக இங்கு அரசு செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இவர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருந்தாலும் மாநில ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில் தேமு ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட இவர்களின் பதவி முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும்,  கிராமத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பதவி காலமும் இன்றுடன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தே.முவின் ஆட்சியின் போது நியமனம் செய்யப்பட்ட கிராமத் தலைவர்களில் 7 பேர் இந்தியர்கள் ஆவர் என்றார் அவர்.

காலியாகவுள்ள இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் நியமனம் செய்ய தயக்கம் காட்டாது.

கடந்த 2008ஆம் ஆண்டில் பேரா ஆட்சியை அப்போதைய மக்கள் கூட்டணி கைப்பற்றிய வேளையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் 33 பேராக இருந்த இந்தியரின் எண்ணிக்கையை 42ஆக உயர்த்தியது, அதேபோன்று 2009ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 52ஆக உயர்த்தப்பட்டது.

 ஆனால் மீண்டும் தேமு ஆட்சியை கைப்பற்றியதும் 52ஆக இருந்த இந்தியரின் எண்ணிக்கையை 33ஆக குறைத்தது.

தற்போது பக்காத்தான் ஆட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக அதிகமான இந்தியர்கள் நியமனம் செய்யப்படுவர். தற்போதைய எண்ணிக்கையை விட இன்னும் கூடுதலாக இந்தியர்களின் எண்ணிக்கை இருக்கும் என சிவநேசன் கூறினார்.






No comments:

Post a Comment