Wednesday 2 May 2018

'ஐந்து வருஷம் கொடுங்க; ஒழுங்கா வேலை செய்யலையா தூக்குங்க' - டத்தோஶ்ரீ தேவமணி (வீடியோ இணைப்பு)


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்த 10 ஆண்டுகளாக  எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து எவ்வித மேம்பாடும் காணாத நீங்கள், இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு உங்களுக்கு சேவையாற்ற ஒரு வாய்ப்பு கொடுங்கள் என சுங்கை சிப்புட் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு வேட்பாளராக களமிறங்கி தோல்வியுற்ற போதிலும் எனது சேவை இங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனது அந்த சேவைகள் மறைமுகமாகவே மேற்கொள்ளப்பட்டது.

சுங்கை சிப்புட் தொகுதி  மஇகா தலைவர் இளங்கோவின் மூலம் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி, சமூக மண்டபங்கள் சீரமைப்பு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதி எதிர்க்கட்சி வசமுள்ள நிலையில் மக்களுக்கான அடிப்படை திட்டங்கள் ஏதும் மேற்கொள்ளப்படுவதில்லை. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு மானியம் ஏதும் ஒதுக்கப்படாது என்பது உலக அரசியல் நடைமுறையாகும்.

வீடியோ இணைப்பு:
எதிர்க்கட்சியை ஆதரித்து மக்கள் தண்டிக்கப்படுவது இனியும் நடக்கக்கூடாது. மக்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்ய உங்களின் பிரதிநிதியாக களமிங்கியுள்ளேன். உங்களின் முழுமையான ஆதரவு இருந்தால் நிச்சயம்
'உங்களின் பிரதிநிதியாக'இருந்து மக்களுக்கு சேவை செய்வேன்.

இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயம் என்னால் முடிந்த சேவைகள் அனைத்தையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

"எனக்கு ஐந்து வருஷம் கொடுங்க; ஒழுங்கா வேலை செய்யலையா தூக்குங்க' என டத்தோஶ்ரீ தேவமணி இங்கு டோவன்பி தோட்ட மக்களுடனான சந்திப்பின்போது உணர்ச்சிவயப்பட கூறினார்.

இந்நிகழ்வில் ஜாலோங் சட்டமன்றத் தொகுதி தேமு வேட்பாளர் டத்தோ டான் லியான் ஹோ,  தொழிலதிபர் யோகேந்திரபாலன், சுங்கை பிளாங் தேர்தல் நடவடிக்கை மைய தலைவர் மகேந்திரன், டோவன்பி ஐபிஎப் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் மனோகரன், இளைஞர் படையினர்,  மஇகாவினர் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment