Saturday, 6 January 2018

நிறைவு பெற்றது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- சிவகுமார் அறிவிப்பு

ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடக்கூடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது என அக்கூட்டணியின் மாநிலச் செயலாளர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

இம்மாநிலத்திலுள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதில் ஜசெக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும். அதே போன்று கெஅடிலான், அமானா, பெர்சத்து ஆகிய கட்சிகளும் தாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளன என்றார் அவர்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்  மக்கள் கூட்டணியின் கீழ் ஜசெக,பிகேஆர், பாஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் 31 இடங்களை வென்ற மக்கள் கூட்டணி மாநில ஆட்சியை கைப்பற்றியது.

10 மாத கால ஆட்சிக்குப் பின்னர்  மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை சுயேட்சையாக அறிவித்துக் கொண்டதால் மாநில மக்கள் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 28 சட்டமன்றத் தொகுதிகளை வென்ற மக்கள் கூட்டணி, பின்னர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஸ், ஜசெக கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளால் உடைந்தது.

14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி வேண்டும் என்பதால் பிகேஆர், ஜசெக, அமானா, பிரிபூமி பெர்சத்து ஆகிய கட்சிகள் இணைந்து  'நம்பிக்கைக் கூட்டணியை' உருவாக்கின.

No comments:

Post a Comment