Monday 22 January 2018

தேமு வெற்றியை தற்காத்துக் கொள்ள மஇகா பாடுபடும் - இளங்கோவன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். இங்குள்ள மக்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என இத்தொகுதியின் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.

கடந்த இரு தவணைகளாக தேசிய முன்னணி தோல்வி கண்டதன் விளைவாக இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வறுமை சூழலில் உள்ள மக்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் எத்தகைய சேவையையும் வழங்க முடியவில்லை.

ஆதலால் இன்னமும் எதிர்க்கட்சியை ஆதரித்து மக்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேசிய முன்னணி தனது வெற்றியை தற்காத்துக் கொள்ள களமிறங்கியுள்ளது.

இந்த வெற்றியை உறுதி செய்ய மக்களும் தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டும். தேசிய முன்னணி வெற்றி பெற்றால் பல்வேறான அனுகூலங்களை இங்குள்ள மக்கள் அனுபவிப்பர் என 8 புதிய மஇகா கிளைகளின் அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

சுங்கை சிப்புட் மஇகாவில் தோற்றுவிக்கப்பட்டுள்ள புதிய கிளைகளின் மூலம் மஇகா இன்னும் வலுபெறும் எனவும் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்காக இக்கிளை உறுப்பினர்கள் பாடுபடுவர் என நம்புவதாகவும் இளங்கோவன் தெரிவித்தார்.

இதனிடையே, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் யோகேந்திரபாலன் கூறுகையில், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு இங்குள்ள மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்.

இத்தேர்தலில் இங்கு வேட்பாளராக களமிறங்க விண்ணப்பித்துள்ளேன். இத்தேர்தலில் உள்ளூர் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. உள்ளூர் வேட்பாளர் வாய்ப்பு எனக்கு வழங்கப்படாவிட்டாலும் கட்சியில் 20, 30 ஆண்டுகளாக உழைத்து சிறப்பாக சேவையாற்றுகின்றவர்களுக்கு வழங்கப்பட்டாலும் நான் முழுமனதாக ஆதரிப்பேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கிளைகளின் நடவடிக்கைக்காக யோகேந்திர பாலன் தலா ஒரு கிளைக்கு 1,000 வெள்ளி வழங்குவதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், புதிய கிளைகளின் தலைவர்களான ர.கணேசன், அசோகன், திருமதி செல்வி, செங்கனி, கண்ணா, கணேஷ், உட்பட பலரும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment