Thursday, 18 January 2018

வறுமை ஒழிய வேண்டுமென்றால் மக்களின் பணம் மக்களிடமே சேர வேண்டும்- வீ.கணபதி ராவ்


நேர்காணல்: கோ.பத்மஜோதி, வீ. மோகன்ராஜ்

ஷா ஆலம்-
2008ஆம் ஆண்டு  நாட்டில் நிகழ்ந்த 'அரசியல் சுனாமி'யில் யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போதைய மக்கள் கூட்டணி 5 மாநிலங்களை கைப்பற்றியது. அதில் ஒன்றுதான் சிலாங்கூர் மாநிலம்.

செல்வம் கொழிக்கும் முதன்மை மாநிலமான இங்கு மக்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது ஒருபுறம் அதிர்ச்சையையும் மறுபுறம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

நாட்டின் சுதந்திர காலத்திலிருந்தே தேசிய முன்னணி மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இம்மாநிலத்தில் மக்கள் கூட்டணி மேற்கொண்ட நலத் திட்டங்களின் மூலம் மக்கள் தேர்வாக இந்த அரசு மாறி போனதன் விளைவாக 2013ஆம் ஆண்டிலும் மக்கள் கூட்டணியே மாநில ஆட்சியை கைப்பற்றியது.

2013ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார் வீ.கணபதி ராவ். கோத்தா அலாம் ஷா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மாநில அரசின் தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் ஆட்சிக்குழு உறுப்பிராக பொறுப்பேற்றார்.

சிலாங்கூர் மாநில அரசில் மேற்கொள்ளப்படும் நலத் திட்டங்கள், ஆட்சிக்குழு உறுப்பினராக எதிர்கொண்ட சவால்கள், அரசியல் பணி ஆகியவை குறித்து கணபதி ராவுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட  சிறப்பு நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.

கே: மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றது பற்றி...?
ப: மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றபோது தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு, பரிவுமிக்க அரசாங்கம் ஆகிய பிரிவுகள்தான் ஒதுக்கப்பட்டன.

ஆனால் மாநில அரசு நிர்வாகத்தில் இந்தியர் பிரதிநிதியாக நான் ஒருவர் மட்டுமே இருந்தால் இந்தியர் நலன் சார்ந்த விவகாரங்களையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது.

கே: இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் வறுமைக்கு எதிரான உங்களின் நடவடிக்கை?

ப: இங்குள்ள  மக்களின் வாழ்வாதாரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமானால் வறுமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்கு மக்களுக்கான நலத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என வியூகம் வகுத்தேன்.

அதற்கேற்ப வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக மாநில அரசு ஒதுக்கீடு செய்த 9 மில்லியன் வெள்ளியை முழுவதுமாக மக்கள் நலனுக்காக பயன்படுத்தினேன். கடந்த காலங்கள் வறுமை ஒழிப்பு திட்டம் என்றால் பரிசு கூடைகள் (ஹெம்பர்) வழங்குவது என்று மட்டுமே இருந்தது. அதில் சில குளறுபடிகள் நிகழ்ந்து வருவதை கண்டறிந்து பரிசுக் கூடைகள் வழங்குவதை நிறுத்தி விட்டு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகளாக மாற்றி அவற்றை மக்களிடம் நேரடியாக வழங்கி வருகின்றேன். இத்திட்டத்திற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறுதொழில் வியாபாரிகள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் அவர்களுக்கான உதவிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1,500 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிறுதொழில் வியாபாரிகளுக்கு வியாபாரம் சார்புடைய பொருளுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதுவே குடும்பஸ்தர்களாக இருந்தால் 3,000 வெள்ளி வழங்கப்படும்.

இது கடந்த காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும். ஆனால் இது ஓர் இனத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் பிற இனத்தவர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியடைந்தது. இன்று இந்தியர்களும் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

கே: மாணவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்?
ப: வறுமை ஒழிப்புத் திட்டத்தில் மாணவர்களும் விடுபடவில்லை. வசதி குறைந்த மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் இன்பென்ஸ் கல்லூரி அமைக்கப்பட்டது. இக்கல்லூரியில் மின்னியல், பொறியியல் உட்பட பெண்களுக்கான முக ஒப்பனை, சமையல் கலை, தையல் பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக முழுக்க முழுக்க இலவசமாகவே நடத்தப்பட்டு வரும் இக்கல்வி திட்டம் இம்மாநில அரசின் சிறப்பம்சமாகும். இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் 20 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர். தற்போது மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தங்கும் வசதி, உணவு, மாதத்திற்கு 150 வெள்ளி அலவன்ஸ் என இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டில் போர்ட்கிள்ளானிலிருந்து கோலசிலாங்கூருக்கு மாற்றம் கண்ட இக்கல்லூரியில் கல்வித் தரம், மாணவர் எண்ணிக்கை மேம்படுத்துவதற்காக கல்வி நிதி ஒதுக்கீட்டில்  2004ஆம் ஆண்டில் 20 லட்சம் வெள்ளியிலிருந்து 40 லட்சமாக மாற்றினோம். 2017ஆம் ஆண்டு 40 லட்சம் வெள்ளியை 50 லட்சம் வெள்ளியாக மாற்றினோம். அதன் பயனாக இன்று அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். மாணவர்களின் கல்வித் தரமும் மேம்பாடு கண்டுள்ளது.

இவையனைத்து வறுமை ஒழிப்பு திட்டத்தில் நான் செய்த புரட்சிகள் ஆகும். எவ்வித தில்லு முல்லு வேலைகளையும் புரியாமல் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடையாளம் தான்  மக்கள் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும்.

- தொடரும்... -


No comments:

Post a Comment