சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர் யார்? என்பதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியமும் முடிவு செய்வர் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகளில் ஒன்றான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க தேசிய நிலையிலிருந்து மட்டுமல்லாது உள்ளூரைச் சேர்ந்த சிலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் பூச்சோங் தொழிலதிபரும் இம்மண்ணில் பிறந்தவருமான யோகேந்திரபாலனும் ஒருவராவார்.
யோகேந்திரபாலன் இங்கு தேமு வேட்பாளராக போட்டியிட மஇகா தலைமைத்துவத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார். இங்கு போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் மக்களை கவர்ந்தவர்களாகவும் சிறந்த சேவை புரிபவர்களாகவும் இருக்க வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு யோகேந்திரபாலன் சேவையாற்றி வருகின்றார். இங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து அவர் சேவையாற்றி வருகின்றார்.
யோகேந்திரபாலன் வேட்பாளராக களமிறங்குவது குறித்து தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப், டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் ஆகியோர் முடிவு செய்வர்.
வேட்பாளராக உள்ளூரைச் சேர்ந்தவர்களோ, தேசிய நிலையைச் சார்ந்தவர்களோ யார் களமிறமிறங்கினாலும் அவரின் வெற்றிக்காக தொகுதி மஇகா களப்பணி ஆற்றும் என இன்று இங்குள்ள அரேனாவில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழாவில் உரையாற்றியபோது இளங்கோவன் குறிப்பிட்டார்.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த இத்தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கிறது.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் சிறந்த மருத்துவர் ஆவார். அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அவரது வெற்றியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இங்குள்ள மக்கள் தான்.
எவ்வித மானியமும் மேம்பாட்டுத் திட்டங்களும் இல்லாமல் சுங்கை சிப்புட் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இல்லாமல் பெரும் இக்கட்டான சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
ஆதலால் வரும் பொதுத் தேர்தல் தேமு வேட்பாளருக்கான ஆதரவை இந்தியர்கள் பெரிதும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மதிலன் நிறுவனத்தின் உரிமையாளர் யோகேந்திரபாலன், அவரின் துணைவியார் திருமதி வர்ஷினி, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி பரமேஸ்வரன், சுங்கை பூலோ கிராமத் தலைவர், மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளி முதல்வர் உட்பட பொது இயக்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment