Friday 12 January 2018

துன் மகாதீரை விமர்சிக்கவோ, குறை கூறவோ மஇகாவுக்கு தகுதியில்லை - சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவிக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கவோ, குறை சொல்லவோ மஇகாவுக்கு  துளியும் அருகதை இல்லை என பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணி செயலாளர் வீ.சிவகுமார் சாடினார்.

22 ஆண்டுகளாக துன் மகாதீர் நாட்டை வழிநடத்திய ஆட்சியில் இருந்தது தேசிய முன்னணிதான். தேசிய முன்னணி கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கட்சியாகும்.

இந்திய சமுதாயத்திற்கு துன் மகாதீர் எதையுமே செய்யவில்லை, அவரின் தலைமைத்துவத்தில்தான் இந்திய சமுதாயம் வீழ்ச்சி கண்டது என விமர்சிக்கும் மஇகா, அவரின் தலைமைத்துவத்தின்போது இந்திய சமுதாயத்திற்கான ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்காதது ஏன்?
மகாதீர் காலத்தில் இந்திய சமுதாயத்திற்காக துன் மகாதீர் காலத்தில் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதனை சீரழித்தது யார்?

மைக்கா ஹோல்டிங்ஸ் தொடங்கப்பட்டது மகாதீர் காலத்தில்தான். அத்திட்டத்திற்கு மகாதீர் முழு அங்கீகாரம் வழங்கினார். ஆனால் அதனை முறையாக நிர்வகிக்காமல் தவறான முறையில் நஷ்டத்தில் விட்டது யார்?
துன் மகாதீர் பிரதமராகவும் டத்தோஶ்ரீ அன்வார் துணைப் பிரதமராகவும் இருந்தபோது டெலிகோம் பங்குகள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டன. அது இந்திய சமுதாயத்திற்கு சென்றடையாமல் பாழாக்கியது யார்?

இந்திய சமுதாயத்தின் கனவான ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலத்தை கெடா மாநில அரசாங்கத்துடன் பேசி அதனை இலவசமாக கொடுத்தவர் மகாதீர்.

இதுமட்டுமல்லாது பலவற்றை மகாதீர் இந்திய சமுதாயத்தை செய்துள்ளார். ஆனால் அவற்றை முறையாக இந்திய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்காமல்  பாழாக்கியது மஇகாதான்.

அன்று எதிர்க்கட்சியாக இருந்து இந்திய சமுதாயத்திற்காக மகாதீர் செய்ய தவறிய பல விஷயங்களுக்கு குரல் கொடுத்தோம். ஆனால் அப்போது மகாதீரை தற்காத்து பேசிய மஇகா தலைவர்கள் இன்று மகாதீர் எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் குறை சொல்ல தொடங்கி விட்டனர்.

துன் மகாதீர் செய்ததெல்லாம் சரி தான் என நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அதே வேளையில் துன் மகாதீரை விமர்சிக்க மஇகாவுக்கு தகுதியில்லை.

அதோடு இன்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தான் இந்திய சமுதாயத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கி கொண்டிருக்கிறார் என கூறும் மஇகா தலைவர்கள், நாளை வேறொருவர் பிரதமர் வந்தார் 'நஜிப்பை விட  இவர்தான் சிறந்த பிரதமர், இந்திய சமுதாயத்திற்காக சிறப்பாக சேவையாற்றுகின்றார்' என புகழாரம் சூட்டுவீர்களா? என் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment