Monday 29 January 2018

சுங்கை சிப்புட்டில் அறிமுகம் கண்டது "மை பாரதம்" மின்னியல் அகப்பக்கம்


கோ.பத்மஜோதி, புனிதா சுகுமாறன்

சுங்கை சிப்புட்-
மலேசிய தமிழ் ஊடகங்களின் வரிசையில் புதிய பரிணாமமாக அவதரித்துள்ள "மை பாரதம்" மின்னியல் அகப்பக்கம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

நவீன மயமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இணையதள பயன்பாடு மக்களிடையே அதிகரித்து கொண்டிருக்கிறது. அன்றாட செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் மின்னியல் ஊடகங்கள் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


அவ்வகையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட "மை பாரதம்" மின்னியல் ஊடகம் நாட்டு நடப்புகள், உலகச் செய்திகள், அரசியல் செய்திகள், மக்கள் கருத்துகள், சினிமா, நேர்காணல் போன்றவற்றை தாங்கி இணையதளங்களில் உலா வருகிறது.


இதனிடையே, இன்று சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற 'மாபெரும் பொங்கல் விழா'வில் "மை பாரதம்" மின்னியல் ஊடகம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அறிமுக நிகழ்வில் ஓம்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான ஓம்ஸ் ப.தியாகராஜன், சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் தலைவரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான லோகநாதன்,  "மை பாரதம்" மின்னியல் ஊடக நிர்வாக ஆசிரியர் ரா.தங்கமணி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, சுங்கை சிப்புட் மஇகா தொகுதிச்  செயலாளர் கி.மணிமாறன், தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், மலேசிய அபிராம் இயக்கத்தின் ஆலோசகர் அமுசு.ஏகாம்பரம், மலேசிய அபிராம் இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், பேராக் மாநில  மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான மு.நேருஜி, கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் நடராஜா, சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment