Friday 19 January 2018

எனது சேவை ஒரு பிரிவினரை மட்டும் சார்ந்தது அல்ல- வீ.கணபதி ராவ் - பகுதி -2


நேர்காணல்:  கோ.பத்மஜோதி, வீ.மோகன்ராஜ்

ஷா ஆலம்-
தற்போதைய சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களை  ஒருபோதும்  கைவிடுவதில்லை. எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறது. அதையே தான் நானும் செய்கிறேன் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் என்று வருகின்றபோது பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பதில்லை. 'அனைவருமே சமம்' என்ற ரீதியிலே என்னுடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிருப்தி அடையும் சிலர் என்னை பற்றி அவதூறான தகவல்களை  பரப்புகின்றனர்.

கணபதி ராவுடனான 'பாரதம்' மின்னியல் ஊடகத்தின்  நேர்காணல் தொடர்ச்சி இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கே: மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள பரிவுமிக்க அரசாங்கம் பற்றி…?

ப: பரிவுமிக்க அரசாங்கத் திட்டத்திற்கு கடந்த காலங்களில் 1 மில்லியன் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. இதன் வாயிலாக மக்களுக்கு சேவையாற்ற அரசு சார்பற்ற பொது இயக்கங்களுக்கு  நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

நான் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றபோது பொது இயக்கங்களுக்கு உதவிட மானியம் இல்லாத சூழல் நிலவியது. பின்னர்  பொது இயக்கங்களுக்கு உதவிட 2014ஆம் ஆண்டில் 1.5 லட்சம் வெள்ளி கிடைத்தது. பின்னர் இந்த ஒதுக்கீட்டை 5 லட்சமாக அதிகரிக்குமாறு முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ காலிட்டிடம் கேட்டுக் கொண்டேன். அவர் வழங்கிய கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு மக்களுக்கு உதவி புரிந்து வருகிறேன்.

முன்பு பொது இயக்கங்களுக்கு அளவே இல்லாமல் மானியங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் என்னுடைய காலத்தில் 5,000 வெள்ளிக்கு மேல் வழங்கக்கூடாது என்பதை கட்டயமாக்கினார்கள். இதனால்  2014 தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட உதவிகளில் அதிகமான இந்திய பொது இயக்கங்கள் மானியங்களை பெற்றுக் கொண்டன. கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு இந்திய பொது இயக்கங்களுக்கு  3,000, 4,000 வெள்ளி என பெற்று தந்துள்ளேன். இதை ஒரு சிலர் “நான் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உதவி வழங்கி வருகிறேன்; வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உதவி வழங்கி வருகிறேன்” என்ற ஆரூடங்களை பரப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக, 2017ஆம் ஆண்டு தொடங்கி இந்த மானிய ஒதுக்கீடு இதர ஆட்சி குழு உறுப்பினர்களுக்கு கைமாற்றப்பட்டது. இப்போது அப்பொறுப்பு எனது கையில் இல்லை. 

மேலும், பரிவுமிக்க அரசாங்கத் திட்டத்தின் வாயிலாக முதியவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது.  சொந்த நிலம் இருந்தும் வீடுகள் மோசமான சூழ்நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில், அவர்களின் வீடுகளை புதுப்பிக்கும், சீரமைத்து தரும் உதவிகள் எல்லாம் மேற்கொள்ளப்படுகிறது.

இவை கடந்த காலங்களில் ஓர் இனத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த உதவிகளாகும். இதை மாற்றியமைத்து இப்பொழுது பிற இனத்தவர்களுக்கும் இந்த உதவிகள் சென்றடைவதில் பெருமையாக எண்ணுகிறேன்.

கே: தோட்ட தொழிலாளர்களுக்கு  உதவும் திட்டங்கள் பற்றி…? 

ப: தோட்டத் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் மாநில அரசு பல ஆக்கரமான திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அவர்களது குடும்ப சூழலுக்கு உதவிடும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றது முதல் 2014ஆம் ஆண்டில்1.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் 1,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 300 வெள்ளி வழங்கப்படுகிறது. இதை 1,700 மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகபட்சம் 5,00 வெள்ளி ஒரு மாணவருக்கு வழங்கப்படுகிறது. ஒருமுறை வழங்கப்படும் இந்த நிதியை அவர்கள் திருப்பி செலுத்த தேவையில்லை.

யூபிஎஸ்ஆர் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்க சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது,  8ஏ பெற்ற மாணவர்களுக்கு 200 வெள்ளி, 7ஏ பெறும் மாணவர்களுக்கு  150 வெள்ளி, 6ஏ பெறும் மாணவர்களுக்கு 100 வெள்ளி சன்மானம் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை முன்னிறுத்து கணிதம், அறிவியல், ஆங்கிலம், தேசிய மொழி ஆகியவற்றை உள்ளடக்கி கல்வி கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இக்கருத்தரங்குகள் வழிநடத்தப்படுகின்றன.

கே: தோட்டப்புறங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் நிலம், குடியிருப்பு பிரச்சினைக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

ப: சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக அமைந்துள்ளது நிலம், குடியிருப்புப் பிரச்சினைகள்தான். ஓரிடத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது அங்குள்ள மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

பல நிலப் பிரச்சினைகளுக்கு போராடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை பெற்று தந்துள்ளோம்.

* புக்கிட் ராஜா தோட்ட நிலப்பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்தது. 2014இல் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டது. 76 தோட்டத் தொழிலாளர்களுக்கு 70 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய தரை வீடுகள் வழங்கப்பட்டன. அதோடு ஒரு சமூக மண்டபம் கட்டப்பட்டு, கோயிலுக்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

* தும்போ தோட்டத்தில் 9 தோட்டத் தொழிலாளர்களுக்கு  வீடுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதில் 4 பேருக்கு அங்குள்ள தோட்ட வீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 5 பேருக்கு வீட்டு நிலங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

- தொடரும்,...-

1 comment:

  1. Dear YB Ganapathy Rao,

    Excellent to your honorable services to our selangor state indian's community. We wish to be continue further more expectation in the honorable state selangor.

    We need strong government in both selangor and putrajaya, i belief that the coming up general election 14th, have to defected BARISON NASIONAL GOVERNMENT.

    REGARD
    SHRI AYYAPPANIN ALAGASEN
    TAMAN PELANGI
    JOHOR BAHRU-CITY

    FOUNDER OF JB TIGER TEAM
    WHATSAP +60177596037

    ReplyDelete