Saturday 20 January 2018

'சிலாங்கூரில் மீண்டும் தேமு ஆட்சியமைத்தால் பல தமிழ்ப்பள்ளிகள் மூடுவிழா காணும்' - வீ.கணபதி ராவ்- பகுதி -3


நேர்காணல்: கோ.பத்மஜோதி, வீ.மோகன்ராஜ்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் பக்காத்தான் கூட்டணி ஆட்சியை தேசிய முன்னணியால் வீழ்த்திட முடியாது. தற்போதைய மாநில அரசு மக்களின் நலன் காக்கும் அரசாக, மக்களின் அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கத்தை வீழ்த்தி தேசிய முன்னணியிடம் ஆட்சியுரிமையை வழங்கும் தவறான நடவடிக்கையை இம்மாநில மக்கள் முன்னெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ்.

கணபதி ராவுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட  சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சி இங்கு  தொகுக்கப்பட்டுள்ளது.

கே: தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு நீங்கள் கண்ட தீர்வுகள்?

ப: தோட்டப்புற மக்களின் நல்வாழ்வுகள் காக்கப்பட வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றுக்கு உரிய முறையில் தீர்வு கண்டு வருகிறேன்.

* செமினி தோட்ட மக்களின் பிரச்சினை நீண்ட கால போராட்டமாகும். 16 ஆண்டுகளாக பிஎஸ்எம் கட்சி இப்போராட்டத்தை முன்னெடுத்தது. இப்பிரச்சினைக்கு தீர்வாக  18 தோட்டத் தொழிலாளர்களுக்கு இலசவ தரை வீடுகள் கட்டப்பட்டது. 18 பேருக்கு 42,000 வெள்ளி கழிவு விலையில் தரை வீடுகள் உறுதி செய்யப்பட்டன. 3.8 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்கு, 1 ஏக்கர் நிலம் ஆலயத்திற்கும், 1/2 ஏக்கர் நிலம் தேவாலயத்திற்கு உறுதி செய்யப்பட்டது.

* பாங்கி தோட்டப் பிரச்சினையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையிலிருந்து விடுவித்து, 28 பேருக்கு அடுக்குமாடியில்  வீடுகளும் 0.7 ஏக்கர் நிலமும் உறுதி செய்யப்பட்டது.

* டனுடின் தோட்டத்தில் 22 பேருக்கு இலவச வீடுகளும் 12 ஆயிரம் சதுர அடி நிலம் இந்து ஆலயத்திற்கும் 12 ஆயிரம் சதுர அடி நிலம் தேவாலயத்திற்கும் வழங்கப்பட்டது.

* டொமினியன் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நஷ்ட ஈடு வழங்கப்ப்பட்டதோடு அங்குள்ள தமிழ்ப்பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் உறுதி செய்யப்பட்டது.

* பண்டார் தோட்டத்தில் உள்ள மக்களுக்கு நிலம் உறுதிப்படுத்தாவிட்டாலும் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டன.  அதே போன்று பெர்ஜெயா தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் வெள்ளி நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என உறுதி செய்யப்பட்டது.

ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து தோட்டப்புற மக்கள் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கே: மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் உங்களின் அதிரடி நடவடிக்கை?

ப: மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் விவகாரங்களை சாதாரணமாக கருதுவதில்லை. இங்குள்ள பல தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கிய நிலப் பிரச்சினைக்கு முந்தைய அரசாங்கம் ஆக்ககரமான திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

பல தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலத்தில் அமைந்திருந்த நிலையில் மேம்பாட்டுத் திட்டங்களின் அவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை அறிந்து அப்பள்ளிகளின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம்.
இதுமட்டுமல்லாது இங்குள்ள பல ஆலயங்கள் எதிர்நோக்கிய நிலப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

மேம்பாட்டுத் திட்டங்கள் என வரும்போது அங்குள்ள பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பதையே மாநில அரசு விரும்புகிறது. ஆனால் அதை சிலர் உணர்வுபூர்வமாக விவகாரமாக மாற்றிவிடுகின்றனர். இன்னும் சிலர் அதை அரசியலாகவும் மாற்றுகின்றனர்.

இம்மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள நிலத்திற்கான ஒப்பந்த கால வரம்பு முடிவு பெற்றுள்ள நிலையில் மாநில அரசு அப்பள்ளிகளை தற்காத்து வருகிறது.

மக்களின் மீதும் இந்தியர்கள் மீதும் பரிவு கொண்டுள்ள சிலாங்கூர் மாநில அரசு, தமிழ்ப்பள்ளிகளை காப்பதில் உறுதி கொண்டுள்ளது. அதனாலேயே ஒப்பந்த கால வரம்பு முடிவுற்ற போதிலும் அப்பள்ளிகள் மூடுவிழா காணப்படாமல் தற்காக்கப்பட்டு வருகிறது.

இதுவே இம்மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி செய்தால் ஒப்பந்த கால வரம்பு முடிவுற்ற பள்ளிகள் இந்நேரம் மூடுவிழா கண்டிருக்கும். மீண்டும் தேசிய முன்னணி சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றினால் இப்பள்ளிகள் மூடுவிழா கண்டுவிடும்.

கே: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி தக்க வைக்குமா?

ப:அதில் சந்தேகமே கிடையாது. சிலாங்கூர் மாநில அரசு இனி தேசிய முன்னணியிடம் வீழாது. மக்கள் முன்புபோல் இல்லை. அனைவரும் விழித்துக் கொண்டுள்ளனர். தேசிய முன்னணிக்கு மக்கள் விடை கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் இம்மாநில அரசை அதனால் கைப்பற்ற முடியாது.

மக்கள் நலன் காக்கும் அரசாக பக்காத்தான் கூட்டணி திகழ்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதால் இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆட்சியை வீழ்த்தி தேமுவிடம் ஆட்சியை வழங்கும் தவறான நடவடிக்கையை மக்கள் முன்னெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

- தொடரும்... -

No comments:

Post a Comment