Thursday 4 January 2018

"தமிழ்நாட்டு அரசியல் எளிதான ஒன்றல்ல"- ரஜினி அரசியலுக்கு மலேசியாவிலிருந்து 'எதிர்ப்பு' குரல்


ஜோர்ஜ்டவுன் (பினாங்கு) -
திரைத்துறையில் வெற்றி என்பது, அரசியலில் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும் என்று கூறிவிட முடியாது. தமிழ்நாட்டு அரசியல் அவ்வளவு எளிதான அரசியலும் அல்ல என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து  மலேசியாவின் பினாங்கு மாநில துணை துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.

அரசியலுக்கு வருவேனா, இல்லையா? என்ற நடிகர் ரஜினியின்  20 ஆண்டுகால மெளனம் டிசம்பர் 31 ஆம் தேதி கலைந்தது. அரசியலுக்கு வருவேன், தனிகட்சி தொடங்கி 2021இல் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி மகிழும் வேளையில் அரசியல் தலைவர்கள் வரவேற்றும், எதிர்மறையான கருத்துகளை கூறியும் வருகின்றனர். அவ்வகையில் பேராசிரியர் இராமசாமியும் தனது முகநூல் அகப்பக்கத்தில் ரஜினியின் அரசியலுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
அதில், திரைத்துறையிலிருந்து அரசியலுக்குச் சென்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா போல் ரஜினியால் அவ்வளவு எளிதில் வெற்றி கொள்ள முடியாது.

தமிழரல்லாத, கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட எம்ஜிஆர், தம்மை  தமிழராக அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழ் மொழியை சரளமாக பேசியதோடு, இலங்கையில் நடந்த தமிழர்களின் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தார்.

தமிழ் திரைத்துறையிலிருந்து வந்து தமிழகத்தின் அரசியலில் தடம்பதித்த மற்றொருவர், எம்ஜிஆரின் வழிவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சிறுநீரக பாதிப்பால், எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு, ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா, கர்நாடகாவைச் சேர்ந்த தமிழர். பல திரைப்படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா, பிறகு அவரின் அரசியல் வாரிசாகவே ஆனார்.

ஆரம்பத்தில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் அக்கறையில்லாமல் இருந்த ஜெயலலிதா, தமிழர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளைக் கண்டு தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். தமிழகத்தின் அரசியலில், திரைத்துறை அனுபவம் என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. அதற்கு, எம்ஜிஆரும், ஜெயலலிதாவுமே நல்ல சான்றுகள்.

அந்த இரு முன்னாள் முதல்வர்களை போன்றே, ரஜினிக்கு பலமான திரைத்துறை அடித்தளம் இருக்கின்றது. தமிழ் திரைத்துறையில் மிகவும் உன்னிப்பாக பணியாற்றி தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் ரஜினி. ஆனால், திரைத்துறையில் வெற்றி என்பது, அரசியலில் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும் என்று கூறிவிட முடியாது. தமிழ்நாட்டு அரசியல் அவ்வளவு எளிதான அரசியலும் அல்ல.

கற்பனை கலந்த திரைத்துறையின் தோற்றத்தை, அரசியல் நிதர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியாது
மேலும், தமிழகத்தில் வேருன்ற, பாஜக-விற்கு தமிழகத்தில் கூட்டணி நண்பர்கள் வேண்டும் என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. ரஜினியும், பாஜகவும் கூட்டணி சேர்வார்களா என்பது, போக, போகத்தான் தெரியும்.

பாஜக முன்னெடுத்து செல்லும் மதவாத அரசியலும், ரஜினி முன்வைக்கும் “ஆன்மிக அரசியலுக்கும்” நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதேவேளையில், அரசியல் அனுபவம் குறைவான, தமிழரல்லாத ரஜினி, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை".

அரசியல் ஆசையில், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து
தமிழகத்தில் ஆட்சியமைக்கலாம் என்று ரஜினி கணக்கிட்டிருந்தால், அது தப்பு கணக்காகவே இருக்கும். பாஜக-வாகட்டும், காங்கிரஸ் கட்சியாகட்டும், தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை சிறுமைபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்  என பேராசிரியர் இராமசாமி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment