Thursday 28 December 2017

'மீண்டும் பிரதமராக' துன் மகாதீர்; மலேசியர்கள் ஏற்பார்களா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலே அடுத்தாண்டுக்கான சூடான, பரபரப்பான விவாதமாக உருமாறியுள்ள நிலையில் புத்ராஜெயாவை கைப்பற்றும் நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்)  வியூகமும் திட்டங்களும் வெற்றியை எட்டி பிடிக்க வழிவகுக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

புத்ராஜெயாவை கைப்பற்ற துடிக்கும் பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரே அக்கூட்டணியிம் வெற்றியை தீர்மானிக்க வல்லதாக அமைந்துள்ளது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அக்கூட்டணியின் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் முகம்மது பதவியேற்பதற்கக்கூடும்.
தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்திய துன் முகாதீர், இன்று தேசிய முன்னணியை எதிர்த்து எதிர்க்கட்சியின் கூட்டணியாக பிரதமராக களமிறங்குவதை எத்தனை மலேசியர்கள் ஏற்பர்?

துன் மகாதீர் சிறந்த தலைமைத்துவ பண்பாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தற்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை எதிர்த்து, போர்க்கொடி தூக்கி, அம்னோவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, இன்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமை பொறுப்பு ஏற்றுள்ள அரசியல் ஆளுமை அவரை மீண்டும் பிரதமர் பதவியேற்க வழிவகுக்குமா?

நாட்டின் மேம்பாட்டில் ஒப்பற்ற தலைவராக விளங்கிய துன் மகாதீரின் 'அரசியல் அதிகாரம்' இன்று எதிர்க்கட்சியை, ஆளும் கட்சியாக உருமாற்றிட முனைந்துள்ள நிலையில், இதனை மலேசிய வாக்காளர்கள் சாதனையாக ஏற்பார்களா, வேதனையாக பார்ப்பார்களா?

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அதிருப்தியும் நிலவுகின்ற சூழலில் பாக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு 'மகாதீர்' எனும் தனி மனிதரின் சாணக்கியம் எந்தளவு பங்காற்றும் என்பதே அனைவரின் கவனயீர்ப்பாகவும் அமைந்துள்ளது.

துன் மகாதீர்  மீண்டும் பிரதமர் ஆவதை அக்கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் பிரதிநிதிகளே விரும்பவில்லை என அறியப்படுகிறது.

ஆளும் கட்சியில் பிரதமராக இருந்து அக்கட்சிக்கு எதிராக இன்று எதிர்க்கட்சியை ஆளும்கட்சியாக உருமாற்ற முனையும் துன் மகாதீரை 'மீண்டும் பிரதமராக' மலேசியர்கள் ஏற்பார்களா?  இல்லையேல் பிரதமர் வேட்பாளராக புதியவர் ஒருவரை பக்காத்தான் கூட்டணி அறிவிப்பு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment