Wednesday 13 December 2017

'படையெடுக்கும் மண்ணின் மைந்தர்கள்': வேட்பாளர் யார்?


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான முழக்கம் கொட்டப்பட்டுள்ள நிலையில் பல தொகுதிகள் தேர்தல் பரபரப்பு இப்போதே தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போது பல தொகுதிகளில் எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

'வேட்பாளர் யார்?'.... இந்த ஒற்றை கேள்வியை  உள்ளடக்கியே மொத்த தேர்தல் களமும் தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மஇகா போட்டியிடும் இத்தொகுதிகள் பரபரப்பு கொஞ்சம் கூடுதலாக எகிறியுள்ளது.
தேசிய மஇகாவை பிரதிநிதித்து யார் வேட்பாளராக களமிறங்குவர்; எந்த தொகுதிகளில் களமிறக்கப்படுவர்? என்ற கேள்விகளுக்கு மத்தியில் 'மண்ணின் மைந்தன்' என சொல்லி உள்ளூர்வாசிகள் களமிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வகையில் மஇகா தேசியத் தலைவர்கள் போட்டியிட்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள உள்ளூர் வேட்பாளர்களை கொஞ்சல் அலசுவோம்.
அஜாட் கமாலுடின் 
சுங்கை சிப்புட் மஇகா தொகுதியின் துணைத் தலைவராக பதவி வகிக்கும் அஜாட் கமாலுடின் சிறந்த கல்வித் தகுதியைக் கொண்டிருப்பதோடு தொகுதி மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.  இவருக்கு பின்னால் சில கிளைத் தலைவர்கள், இளைஞர் பிரிவின் ஆதரவு இருப்பதும் இவரை 'உள்ளூர் வேட்பாளர்' பட்டியல் இணைத்துள்ளது.

கி.மணிமாறன்
சுங்கை சிப்புட் மஇகா தொகுதியின் செயலாளராக பணியாற்றி வரும் மணிமாறன், தொகுதி மஇகாவின்  முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தொகுதி செயலாளர் என்ற முறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தனது பரிந்துரையை கட்சித் தலைவரிடம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* முனைவர் சண்முகவேலு
- சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் உதவித் தலைவராக பதவி வகிக்கும் சண்முகவேலுவின் பெயரும் உள்ளூர் வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம்பெறுகிறது. முனைவர் பட்டத்தை பெற்றுள்ள இவர் இங்கு நிலவும் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். குறிப்பாக சுங்கை குருடா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்ப்பள்ளி இவரது குழுவினர் முன்னெடுத்த முயற்சிகளின் வழி கிடைக்கப்பெற்றதாகும்.


யோகேந்திர பாலன்
- சுங்கை சிப்புட்டில் பிறந்து தற்போது பூச்சோங்கில் தொழில் முனைவராக உருவெடுத்துள்ள யோகேந்திர பாலன் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் நிலையில் தொடர்ந்து சேவைகளை செய்ய ஓர் அங்கீகாரம் தேவை எனும் நிலையில் 'வேட்பாளராக' களமிறங்க முனைந்துள்ளார்.


* வின்சென்ட் டேவிட்
- சுங்கை சிப்புட் வட்டாரத்தில் 'கர்மா' இயக்கத்தின் வழி பல்வேறு சேவைகளை மேற்கொண்டிருக்கும் வின்சென்ட் டேவிட்டின் பெயரும் 'உள்ளூர் வேட்பாளர்' பட்டியலில் அடிபடுகிறது. பினாங்கு மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவராகவும் சேவையாற்றி தற்போது சொந்த மண்ணிலேயே சேவை செய்ய களமிறங்கியுள்ளார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட 4 பேரின் பெயரை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். அதில் ஓர் உள்ளூர் வேட்பாளரின் பெயரும் உள்ளது எனவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 'அதிர்ஷ்டக் காற்று' யார் பக்கம் வீசப்போகிறது?

No comments:

Post a Comment