Friday 22 December 2017

யார் குற்றம்?: பிரச்சினைகளும் கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டதால் 'மக்கள் பிரதிநிதி'யாகும் எதிர்க்கட்சியினர்- பகுதி-1



நேர்க்காணல்: புகழேந்தி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்றைய அரசியல் சூழலில் தேர்தல் களத்தில் களமிறங்கி வெற்றி, தோல்வியை சந்திக்க தயாராக இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு களம் காண மறுக்கும் நிலையே நீடிக்கிறது. இதனால் வாய்ப்புள்ள இடங்களில்கூட தோல்வியை சந்திக்கும் இன்னலை வேட்பாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்கிறார் பேராக் நேசக்கரங்கள் இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் ராஜு.

பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும் என தலைவர்கள் மேடைதோறும் முழக்கமிடுகின்றனர். ஆனால் அந்த முழக்கத்தில் இருக்கும் வேகம் கூட மக்களுக்கான களப்பணியில் இருப்பதில்லை. அதன் தொடர்ச்சியே புந்தோங் வட்டாரத்தில் தேசிய முன்னணியின் தோல்வி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

'பாரதம்' மின்னியல் ஊடகத்திற்கான சிறப்பு நேர்காணலின்போது பல அரசியல் சுவாரஸ்யங்கள் நிறைந்த கருத்துகளை அவர் பகிர்ந்துக் கொண்டார். அதன் முழு விவரமும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கே: 'பேராக் நேசக்கரங்கள் இயக்கம்' பற்றி...?
ப: 'பேராக் நேசக்கரங்கள் இயக்கம்' நண்பர்களை உள்ளடக்கி சமூகச் சேவைகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். 2013இல் பதிவு செய்யப்பட்ட  இவ்வியக்கம் இளம் வயது முதல் பழகிய நண்பர்களின் ஒன்றிணைப்பில் உருவாக்கப்பட்டது. படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு சமூக நடவடிக்கைகளே இவ்வியக்கம் தோன்றுவதற்கன அடித்தளமானது.

புந்தோங் வட்டாரத்தில் போதை, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டு அவர்களை நல்வழிப்படுத்தி சமூகச் சேவையில் ஈடுபடுத்தியதில் இவ்வியக்கம் மேற்கொண்ட முயற்சிகளில் முதல் வெற்றியாகும். போதை, மதுவுக்கு அடிமையானவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கும் நிலையே நீடிக்கிறது. அதனை மாற்றியமைத்தோம்.

அதேபோன்று 1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோத்தாபாருவில் இருந்து இங்கு தங்கி படித்த 5 மாணவர்கள் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர்களை கண்ட நண்பர்கள், அவர்களுக்கு உதவும் நோக்கில் புந்தோங்கில் வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து தங்க வைத்தோம். அவர்கள் தங்கியிருந்தபோது நண்பர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். படிப்பு முடிந்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது அவர்களுடன் சென்றோம். அப்போது நாங்கள் செய்த உதவியை பற்றி பெற்றோர்களிடம் சொன்னபோது அவர்களிடம் கண்ணீர் மல்க நன்றி கூறிய சமயம் நெகிழ்ந்து போனோம். அப்போதுதான்  ஏதோ ஒரு நல்லது செய்கிறோம் என தோன்றியது.

அதனை தொடர்ந்து நண்பர்களின் உதவியுடன் பல சமூகச் சேவைகளை மேற்கொண்டு வருகிறோம். முழுக்க முழுக்க நண்பர்களின் ஒத்துழைப்பில் மட்டுமே சமூகச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கே: எத்தகையை சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறீர்கள்?

ப: மாணவர்களின் கல்வி நலனை முன்னிறுத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி பட்டறை, 'இடைநிலைப்பள்ளயை நோக்கி' கருத்தரங்கு, குடும்ப சூழலால் துன்பப்படும் மாணவர்களுக்கு உதவி, வறுமையால் கஷ்டப்படும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான நுழைவுக் கட்டண உதவி, ஊனமுற்றவர்களுக்கு உதவி, பெருநாள் காலங்களில் உதவி என பலவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

கே: இந்த உதவிகளை மேற்கொள்வதற்கான பண பலம்...?
ப: இவ்வியக்கத்தின் மூலம் செய்யப்படும் உதவிகள் அனைத்தும் நண்பர்கள் கொடுக்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை மத்திய, மாநில அரசாங்கங்களிடம் எவ்வித மானியமும் பெறாமல் உதவிகளை மேற்கொண்டு வருகிறோம்.


கே: உங்களது பார்வையில் இன்றைய அரசியல் நிலவரம்?

ப: இன்றைய அரசியல் நிலவரம் படுமோசமான சூழலிலே உள்ளது. மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டிய தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பிரச்சினைள் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டிய மக்கள் 'எதிர்பார்ப்போடும்' உள்ளனர்.

இந்நாட்டிலேயே அதிகமான இந்திய வாக்காளர்கள் உள்ள தொகுதி புந்தோங் மட்டுமே. ஆனால் இங்குள்ள இந்தியர்கள் நிலை இன்னமும் படுபாதாளத்திலேயே உள்ளது. தங்களது பிரச்சினைகளை தீர்க்க 'சிறந்த தலைவன்' வரமாட்டானா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி கிடக்கிறது. ஆனால் அதை பூர்த்தி செய்யத்தான் ஒரு சிறந்த தலைவன் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

அரசியல் சூழலை பொறுத்தவரை தேசிய முன்னணி அரசாங்கத்தை அவர்கள் வெறுக்கவில்லை. தீர்க்கப்படாத பிரச்சினைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் கோரிக்கையும் அதிருப்தி அலையாக வீசுவதால் தேமு வேட்பாளர் தோல்வி காண்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர் மக்கள் பிரதிநிதி'யாகிறார்.

 நாளை தொடரும்...

No comments:

Post a Comment