Friday 22 December 2017

அத்துமீறும் போலீசார்; பொது இடத்தில் திவ்யசந்தனை முரட்டுத்தனமாக தாக்குவதா? விசாரணை தேவை- வழக்கறிஞர் பவாணி மகஜர்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஒரு  நபரை கைது செய்வது போலீசாரின் உரிமையாகும். ஆனால் அதற்காக  பொது இடங்களில் காட்டுமிராண்டிதனமாக ஒருவரை அடித்து துன்புறுத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் பேராக் மாநில போலீஸ் படைத் தலைவருக்கு மகஜர் வழங்கப்பட்டது.

கடந்த 1ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த திவ்யசந்தன் த/பெ ராஜேந்திரன் (வயது 21), தன்னை இருவர் பின்தொடர்வதை உணர்ந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார். பின் தொடர்ந்து வந்த ஆடவர்கள் திய்வசந்தனை வழிமறித்ததோடு போலீஸ் என அடையாளப்படுத்தி அவரை தாக்கியுள்ளனர். பொது இடங்களில் திவ்யசந்தனை முரட்டுத் தனமாக தாக்கியதோடு அவரை சாலையில் தரதரவென இழுத்து காயப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக கூறியும் அதனை பொருட்படுத்தாமல் அடித்து துன்புறுத்தியதோடு அவரை கைது செய்து ஆயர் தாவார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர் என வழக்கறிஞர் பவாணி குறிப்பிட்டார்.

ஆயர் தாவார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று கைவிலங்கிட்டு கறுப்பு துணியால் கண்களை கட்டி மீண்டும் தாக்கியுள்ள சம்பவம் மனித உரிமை மீறலாகும் என குறிப்பிட்ட பவாணி, போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த முரட்டுத்தனமான தாக்குதலை பேராக் மாநில போலீஸ் படைத் தலைவர் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

போலீசாரின் இந்த முரட்டுத் தனமான தாக்குதலால் தலையில் கடுமையாக தாக்கிப்பட்ட திவ்யசந்தனை டிசம்பர்  5ஆம் தேதி வரை தடுத்து வைத்தனர்.
இன்று காலை மாநில போலீஸ் தலைமையகத்தில் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டபோது  செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இது குறித்து பேசிய சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஜெயகுமார், ஒருவரை கைது செய்வது போலீசாரின் கடமையாகும். ஆனால் அதற்கான சட்டத்தை மீறி பொதுமக்கள் முன்னிலையில் தாக்குவது போலீஸ் மீதான தவறான கண்ணோட்டை உருவாக்குவதோடு அவர்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திடும் என கூறினார்.

இந்த மகஜர் ஒப்படைப்பின்போது பாதிக்கப்பட்ட திவ்யசந்தனும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment