Wednesday 27 December 2017

உலகை உலுக்கிய 'சுனாமி' பேரலை; 13 ஆண்டுகளை கடந்தும் நீங்காத துயரம்


ரா.தங்கமணி

2004ஆம் ஆண்டு யாருமே அறிந்திராத மிகப் பெரிய பேரழிவு சம்பவம் நிகழ்ந்ததென்றால் அது 'சுனாமி' பேரலை தாக்குதல்தான். டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியா, சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் 'சுனாமி' அலைகளை ஏற்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'சுனாமி' என்பதை யாருமே அறிந்திராத அக்காலகட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவில் விபரீதத்தை அறியும் முன்னரே லட்சக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டதுதான் இந்த பேரழிவின் உச்சக்கட்டமாகும்.

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ரம்மியமாக பார்த்து ரசிப்பதற்கும் கரையில் நின்று விளையாடுவதற்கும்  இதமான காற்றையும் உள்வாங்குவதற்கு மிக அமைதியாக வழிவிட்டு கொண்டிருந்த கடல் அலையில் இந்த கொடூர சீற்றம் இந்தோனேசியா மட்டுமல்லாது, இந்தியா, அந்தமான், நிக்கோபார் தீவுகள், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மியான்மார், மாலத்தீவு, சோமாலியா, தான்சானியா உட்பட பல நாடுகளை தாக்கியது.

சுனாமி தாக்குதலில் இந்தோனேசியாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர். அதே போன்று பல நாடுகளில் மக்கள் பலியானதோடு பெரும்பாலானோர் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.

உறவுகளை பறிகொடுத்த நிலையில் கண்ணீர் கடலில் தத்தளித்த மக்கள் உயிரற்ற பல உடல்களை மீட்டு ஒரே புதைக்குழியில் புதைத்த சம்பவங்களும் அன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருந்தன.

இந்த சுனாமி பேரலைக்குப் பின்னர் சிறிய, பெரிய அளவில் சுனாமி தாக்குதல் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தாலும் 2004இல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலே இன்றும் பலரது நினைவுகளில் நீங்காத துயரமாக நீடிக்கிறது.

சுனாமி தாக்குதல் நடந்து இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைகின்ற வேளையில் இன்னமும் அதன் சோகம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment