Friday 22 December 2017
குற்றமே செய்யாத என் மீது குற்றப்பதிவுகள் ஏன்? திவ்யசந்தன் கேள்வி
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
எவ்வித குற்றமும் புரியாத என் மீது எவ்வித குற்றப்பதிவுகள் இருக்கக்கூடாது. அது என் வாழ்வையே சீரழித்து விடும் என போலீசாரால் தாக்கப்பட்ட திவ்யசந்தன் த/பெ ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தன்னை பின் தொடர்ந்தவர்கள் போலீஸ் என தெரியாததால் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தினேன். ஆனால் என்னை தடுத்து நிறுத்தி அவர்கள் போலீஸ் என தெரிந்ததும் மன்னிப்பு கேட்டு ஒத்துழைப்பு நல்குவதாக கூறிய பின்னரும் கடுமையாக தாக்கி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
பின்னர் ஆயர் தாவார் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று கைகளில் விலங்கிட்டு, கண்ணை கறுப்பு துணியால் கட்டி பலர் என்னை அடித்து தாக்கினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றேன்.
டிசம்பர் 5ஆம் தேதி வரை தடுப்புக் காவலி தடுத்து வைக்கப்பட்ட நான், பின்னர் விடுவிக்கப்பட்டேன். நான் என்ன குற்றம் செய்தேன் என தெரியாத நிலையில் போலீசார் மேற்கொண்ட தாக்குதல் ஓர் அச்சவுணர்வையே ஏற்படுத்தியது.
நான் இதுவரை எவ்வித குற்றச் செயல்களுக்காகவும் சிறைக்குச் சென்றதில்லை. என் மீது எவ்வித குற்றப் பதிவுகளும் இல்லை.
எனவே, இந்த ஒரு சம்பவம் என் மீதான குற்றப்பதிவாக உள்ள நிலையில் போலீசார் என்னை இக்குற்றப்பதிவிலிருந்து விடுவிக்க வேண்டும். இதனால் என் வாழ்க்கையே நிர்மூலமாக்கப்படலாம். அதனை நான் விரும்பவில்லை.
என் வாழ்க்கையை சிறப்பான ஒன்றாக நான் மாற்றிக் கொள்ள இந்த ஒரு போலீஸ் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என திவ்யசந்தன் வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் தொடர்பில் பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் வழக்கறிஞர் பவாணி மகஜர் சமர்ப்பித்தார். சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் உட்பட பலர் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment