Tuesday 5 December 2017

'பிரதமர்' மகாதீர்; 'துணைப் பிரதமர்' வான் அஸிஸா - பக்காத்தான் கூட்டணி அறிவிப்பு


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சியை கைப்பற்றினால் பிரதமராக துன் டாக்டர் மகாதீரையும் துணைப் பிரதமராக டத்தோஶ்ரீ வான் அஸிஸாவையும் அக்கூட்டணி முன்மொழிந்துள்ளது.

பிகேஆர், ஜசெக, அமானா, பிபிபிஎம் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களாக புத்ராஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் கூட்டணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிகேஆர் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.

ஆயினும் இம்முடிவுக்கு டத்தோஶ்ரீ அன்வாரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம். அவர் ஒப்புதல் அளித்தால் இந்த பரிந்துரையில் எங்களுக்கு முழு சம்மதம் என ஜோஹாரி கூறினார்.

இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் துன் மகாதீரை பிரதமராகவும் டத்தோஶ்ரீ வான் அஸிஸாவை துணைப் பிரதமராகவும் முன்னிறுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஶ்ரீ அன்வார், அடுத்தாண்டு ஜூன் மாதம் விடுதலை ஆகிறார். ஆயினும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரால் அரசியல் பதவிகளை வகிக்க முடியாது.

No comments:

Post a Comment