Monday 1 January 2018

"சவால்களை எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டுவோம்" - டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்


கோலாலம்பூர்-
ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம். பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.

அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாம் ஒவ்வொருவரும் நமது பங்கினை ஆற்ற வேண்டும்.

பல இனத்தவர்கள் வாழும் இந்நாட்டில் எல்லா மதத்தினரிடையும் நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மேலோங்க வேண்டும். ஒற்றுமை மேலோங்க அனைத்து இனத்தவர்களும் பிற இனத்தவர்களின் சமயம், கலாச்சாரம், இறைநம்பிக்கை அடிப்படையில் மிதவாதத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே ஒரு நாடு சுபிட்சமும் ஒற்றுமையும் அடைய முக்கிய அம்சமாகும்.

2018ஆம் ஆண்டு சுகாதார ரீதியில் நாடு பல சவால்களை எதிர்கொள்ள சுகாதார அமைச்சர் என்ற முறையில் நாட்டின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல உருமாற்றத் திட்டங்களை வகுத்துள்ளோம். இந்த உருமாற்றத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே மிகச் சிறந்த சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பதில் நான் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இந்த 2018ஆம் ஆண்டு நாட்டின் பொதுத்தேர்தலைச் சந்திக்கக்கூடிய ஓர் ஆண்டு என்பதால் இவ்வாண்டு நாட்டிற்கு மட்டுமின்றி ம.இ.காவிற்கும் மிக முக்கியமான ஓர் ஆண்டாகும். கடந்த 2017ஆம் ஆண்டில் ம.இ.கா.வில்  இருந்த சிறு சிறு பிரச்சனைகளுக்கான அனைத்து முடிச்சுகளும் அவிழ்கப்பட்டுள்ளன. கட்சிக்கு வெளியேயும் பிரிந்தும் கிடந்த ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைந்து கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளனர்.

அவ்வகையில், நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டு ம.இ.காவை மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக உறுமாற்றியுள்ளது. இந்த உருமாற்றமானது வரக்கூடிய பொதுத்தேர்தலை ம.இ.கா சிறப்பாக எத்கிர்கொள்வதோடு, கடந்த பொதுத்தேர்தலைக் காட்டிலும் சிறந்த அடைவைப் பதிவு செய்யும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும், சமுதாயத்திற்குத் தயங்காமல் குரல் கொடுக்கும் நிலையைக் கட்சியில் உருவாக்க வேண்டும். கட்சியின் மீது நம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பும் இதுவே ஆகும். அந்த நோக்கத்தோடுதான் நாம் அனைவரும் நம் பங்கினை ஆற்ற வேண்டும். தற்பொழுது ம.இ.கா கட்சிக்குத் தேவையான வலு, பலம், உறுப்பினர்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்தும் மேலோங்கப்படவும் வேண்டும். அதேநேரத்தில், இந்தியச் சமுதாயமும் ம.இ.கா மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். சமுதாயத்தின் நம்பிக்கையே வரக்கூடிய பொதுத்தேர்தலை ம.இ.கா எதிகொள்ள உந்துசத்தியாகும்.

அவ்வகையில், இந்த 2018ஆம் ஆண்டுக்கான நமது கனவுகளையும் முயற்சிகளையும் நிறைவேற்ற நாம் அனைவரும் புத்தாக்கச் சிந்தனையோடு செயல்பட்டு; புதியதொரு சமுதாயமாக உருவெடுக்க வேண்டும். அவ்வகையில், மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த  புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இஃது அனைவருக்கும் சிறந்ததோர் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment