Thursday 29 November 2018

சீபில்ட் ஆலய மோதல்; போலீசாரின் நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்


கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்தியர்கள் மீது குண்டர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ளக்கூடிய விவகாரம் அல்ல. இது நாட்டு மக்களிடையேயான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய விவகாரம் என்பதால் போலீசார் இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

மோதல் நடைபெற்ற அன்று சம்பவ இடத்திற்கு போலீசார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே வந்துள்ளனர் என அறியப்படுகிறது. ஆலயத்திற்கும் சுபாங் ஜெயா காவல் நிலையத்திற்கும் 2 கிலோ மீட்டர் தூரமே சுற்றளவே உள்ள நிலையில் ஏன் துரிதமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது?

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது? என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த மோதல் ஏற்படுவதற்கு மேம்பாட்டு நிறுவனமே காரணமாக இருக்கலாம் என சந்தேக்கிக்கப்படும் நிலையில் அது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.

இரு இனங்களுக்கிடையில் மோதல் போக்கை தூண்டி விட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இதில் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால் போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

அதோடு, இவ்வாலய மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் இளைஞர் வீரசிங்கம் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு மருத்துவ உதவிநிதியாக 5,000 வெள்ளியை வழங்கினார்.

No comments:

Post a Comment