Thursday 29 November 2018

சீபில்ட் ஆலய மோதல்; கூலிப்படையை ஏவியது வழக்கறிஞர்கள்- முஹிடின் யாசின்

கோலாலம்பூர்-

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆடவர்களை கூலிக்கு பணம் கொடுத்து ஏவிவிட்டது மேம்பாட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் ஆவர் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

கடந்த 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஆலயத்தில் திரண்டிருந்த இந்தியர்களை ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியது.

நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவான இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் நிறுவனம்  ஆலயத்தில் திரண்ட இந்தியர்களை விரட்டியடித்து ஆலயத்தை கைப்பற்றும் நோக்கில்  சுமார் 150,000 வெள்ளி கொடுத்து கூலிப் படையை ஏவியுள்ளது தெரியவந்துள்ளது.

50 பேருக்கு சுமார் 150 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை பேரம் பேசப்பட்டு இந்த அராஜகச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இவ்வாறு கூறினார்.
இந்தப் பணம் வழக்கறிஞர்களது என்று கருத முடியாது. இப்பணத்தை வழக்கறிஞர்கள் விநியோகம் மட்டுமே செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் வழக்கறிஞர் அல்லது மேம்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,இதில் யார் சட்டத்தை மீறியிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முஹிடின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment