Tuesday 20 November 2018

கூர்மையான ஆயுதத்தால் மனைவி கொலை; ஆடவர் கைது


ஜோர்ஜ்டவுன் -
தன் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கி மனைவிக்கு மரணம் விளைவித்த கட்டொழுங்கு ஆசிரியர் ஒருவர் போலீசிடம் சரணடைந்தார்.

நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் 39 வயதுடைய திருமதி சாந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஆயர் ஹீத்தாம் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.

நேற்றிரவு 10.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தலையில் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால் திருமதி சாந்தி மரணமடைந்தார் என்று தென் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சே ஸைமானி சே அவாங் கூறினார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் இரவு 11.00 மணியளவில் வீட்டை விட்டு
வெளியேறி சொந்த கிராமத்திற்குச் சென்ற அவ்வாடவர், இன்று காலை 11.00 மணியளவில் வீட்டுக்கு திரும்பியபோது மனைவில் அசைவின்றி கிடப்பதை கண்டுள்ளார்.

அதன் பின்னர் இதனை குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர், பிறகு கெடா,கூலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 42 வயதான சந்தேக நபர் கூலிம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மாலை 6.00 மணியளவில் இப்புகார் ஜோர்ஜ்டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், படுக்கையறையில்  ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
தலையிலும், நெற்றியிலும் இடதுப்புற காதிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு திருமதி சாந்தி தாக்கப்பட்டுள்ளதாக சே ஸைமானி கூறினார்.

10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் புரிந்த இவ்விருவருக்கும் பிள்ளைகள் கிடையாது எனவும் நாளை காலை 10.00 மணிக்கு பினாங்கு மருத்துவமனையில் சவப்பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

இச்சம்பவம் செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment