Thursday 2 November 2017

சீனர்களை போன்ற சிந்தனை மாற்றம் நமக்கும் வேண்டும்- சிவநேசன்

ரா.தங்கமணி

பீடோர்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சீனர்களை போன்ற சிந்தனை மாற்றத்தை வளர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது வளர்ச்சியை நாம் பதிவு செய்ய முடியும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

இந்தியர்களின் மேம்பாட்டை புறக்கணிக்கும் தேசிய முன்னணியை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தை ஏமாற்றி வரும் தேமுவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியர்கள் எத்தனிக்க வேண்டும்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தஞ்சோங் மாலிம் தொகுதியில் மசீச வேட்பாளரை எதிர்த்து ஜசெக வேட்பாளர் களமிறங்கும் சூழலில் அவருக்கு இந்தியர்கள் வற்றாத ஆதரவை வழங்க வேண்டும்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை இனவாத கட்சி என குறை கூறம் தேமுவினர், உண்மையில் யார் இனவாதம் கொண்டுள்ளனர் என்பதை உணர வேண்டும்.
தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதிகுட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதியிலும் சீனர், மலாய்க்காரர், இந்தியர் என மூவினத்திற்கும் போட்டியிட வாய்ப்பளிப்பது பக்காத்தான் ஹராப்பான் மட்டுமே. ஆனால் தேசிய  முன்னணியில் ஓர் இனத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரம் நிலைபெற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் அவசியம் என்பதை சீனர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அதன் விளைவாகவே பக்காத்தான் ஹராப்பானை அவர்கள் ஆதரிக்கின்றனர்.
அதே போன்றதொரு சிந்தனை  மாற்றத்தை  இந்தியர்கள் கொள்ள வேண்டும். 60 ஆண்டுகளாக ஆதரித்த ஒரு கட்சியினால் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளோம். இனியும் அதுபோன்றதொரு தவறை செய்யக்கூடாது. 

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தங்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி காங் போட்டியிடுகின்ற வேளையில் அவரை இந்தியர்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என பீடோர், தாமான் டாயாவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment