Thursday 16 November 2017

சர்ச்சைகள் வேண்டாம்; சட்டத்தை இயற்றுங்கள்- சிவநேசன் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஈப்போ-
ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த முஸ்லீம் பெண்ணை அதன் உரிமையாளர் பணிமாற்றம் செய்த விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்க வேண்டாம் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

அந்த ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிய அந்த பணிப்பெண் 'துடோங்' அணிந்ததால் அப்பெண்ணை வேறு பணிக்கு மாற்றியதை அவர் பணியிடம் மாற்றினார்.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண்மணி இவ்விவகாரத்தை  சமூக வைரலாக்கியதை தொடர்ந்து இது தற்போது அரசியல் சர்ச்சையாக உருமாறியுள்ளது. அம்னோ புத்ரி, சுற்றுலா, பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆகியோர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் அப்பெண்ணுக்கு வேண்டிய சட்ட உதவிகளை வழங்குவதாக கூறுகிறார்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த தொழிற்சங்க வழக்கறிஞருமான சிவநேசன், இது தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இடையிலான போராட்டம் ஆகும். அதனை அரசியலாக்க வேண்டியதில்லை.

ஒரு தொழிலாளி வேலையில் சேரும்போதே அந்நிறுவனத்தின் சட்டவிதிகளுக்கு உட்படுவதாக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்.  சம்மதம் தெரிவித்த பின்னர் விதிமுறைகளை குறை கூறுவது நியாயமாகாது.
இதுபோன்று தொழில் நிறுவனங்களில் சட்டவிதி நடவடிக்கைகளை அரசியல்  விவகாரமாக்கினால் தொழில் நிறுவனங்கள் மூடுவிழா கண்டு பிற நாடுகளுக்கு படையெடுத்து விடும்.

இதனால் மலேசியர்கள் பெரும்பாலானோர் வேலை இழக்கும் சூழலுக்கு ஆளாகலாம். ஏற்கனவே 2013 முதல் இவ்வாண்டு வரையில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 30 ஆண்டுகளாக தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என போராடி வருகின்றன. அதில் ஒன்று பணியடத்தில் பாலியல் தொல்லைக்கான சட்டம் வரையப்பட வேண்டும் என்பதாகும்.

அதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம்  2012 செக்‌ஷன் 80a (பணியிட பாலியல் தொல்லை) வகுத்து பணியிடங்களில் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு மாதத்திற்கு அந்த புகாரை விசாரத்து தீர்வு காண வேண்டும் என கூறப்படுகிறது.

அதேபோன்று 2ஆவது கோரிக்கையான  இன ஒற்றுமை சட்டம் இன்னும் அமலாக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் கீழ் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பணியிட வாய்ப்புகளை வழங்குவதாகும். இனம், மதம் ஆகியவற்றை காரணம் காட்டி பதவி உயர்வு மறுப்பது, வேலை வழங்காமல் புறக்கணிப்பது போன்றவற்றை மேற்கொண்டால் இந்த சட்டத்தில் விசாரிக்கலாம்.  இச்சட்டம் அமலாக்கப்பட்டிருந்தால் இந்த முஸ்லீம் பெண்ணின் விவகாரத்தை விசாரித்திருக்கலாம்.

பிற நாடுகளில் இவ்விவகாரங்கள் சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் நாம் இன்னுமும் சட்டமாக இயற்றாமல் சர்ச்சையாக மட்டுமே உருமாற்றி கொண்டிருக்கிறோம்.

இன்னும் அமலாக்கம் செய்யப்படாத இந்த சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த முனையுமா? என கேள்வி எழுப்பிய சிவநேசன்,  வேலை வாய்ப்பு பிரச்சினை அபாயகட்டத்தை நெருங்கும் நிலையில் தொழிலாளர் விவகாரங்களை அரசியல்  சர்ச்சையாக உருமாற்றுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment