Friday 17 November 2017

களமிறங்கி சேவையாற்றுங்கள்; வேட்பாளராக பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள்; ஆனால்...- டத்தோஶ்ரீ சுப்ரா அதிரடி

புனிதா சுகுமாறன், கோ.பத்மஜோதி

ஈப்போ-
மக்களுக்கு சேவையாற்ற களமிறங்குங்கள்; வேட்பாளராக வேண்டுமானாலும்  பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள். ஆனால் வேட்பாளர் யார் என முடிவு செய்த பின்னர் கீழறுப்பு வேலைகள் செய்தால் கட்சி தலைமைத்துவம் அதனை பொறுத்துக் கொள்ளாது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அதிரடியாக அறிவித்தார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் எனன் எதிர்பார்க்கப்படும் வேளையில் இப்போதே சில தங்களை வேட்பாளராக சித்திரித்து பிரச்சாரம் செய்து கொள்கின்றனர்.

இதனை சுட்டிக் காட்டி பேசிய அவர், வேட்பாளராக வேண்டும் என விரும்புபவர்கள் மக்களுக்காக இறங்கி சேவையாற்றுங்கள், வேட்பாளராக கூட பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள். ஆனால் வேட்பாளர் யார் என்பதை கட்சி, தேமு தலைமைத்துவம் தான் முடிவெடுக்கும்.

அவ்வாறு வேட்பாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் போட்டியோ பொறாமையோ கொள்ள வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி தேமு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

அதை விடுத்து தேமு வேட்பாளருக்கு எதிராக கீழறுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. அதனை ஒருபோதும் கட்சி தலைமைத்துவம் ஆதரிக்காது என நேற்று இங்கு புந்தோங் வட்டாரத்தில் நடைபெற்ற பேராக் மாநில மஇகா ஏற்பாட்டிலான தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் இவ்வாறு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ  ஸம்ரி அப்துல் காதீர், மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ ஆகியோர் உட்பட மஇகா தலைவர்கள், பொறுப்பாளர்கள், தேமு உறுப்பு கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment