ரா.தங்கமணி
தெலுக் இந்தான் -
உணவகத்தில் சமைப்பட்ட ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சி கலந்திருப்பதாக் குற்றஞ்சாட்டப்பட்ட மல்லிகா விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் திருமதி மல்லிகா இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 'குற்றமற்றவர்' என கூறி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2015இல் டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை மேற்கொண்ட சுகாதார அமைச்சு, 250 கிராம் சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வாங்கிக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சியின் மரபணு (டிஎன்ஏ) கலந்திருப்பதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது.
இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சி கலந்திருப்பதாக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் மல்லிகா விடுதலை செய்யப்பட்டார் என அவரின் வழக்கறிஞராக ஆஜரான அ.சிவநேசன் தெரிவித்தார்.
ஏனெனில், இந்த வழக்கில் மல்லிகாவுக்கு ஆட்டிறைச்சியை விநியோகம் செய்த குமரகுரு என்பரும் தான் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதில்லை என சாட்சியம் அளித்துள்ளார்.
ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சியின் மரபணு கலந்திருப்பதாக கூறப்படுவது முதன்மை விற்பனையாளர் நிறுவனத்தைச் சேர்ந்தது ஆகும்.
இவ்வழக்கின் விசாரணையில் சுகாதார அமைச்சு கைப்பற்றிய ஆட்டிறைச்சியில் தர பரிசோதனை நடத்தியதில் அதில் பிற இறைச்சிகளின் மரபணு இருப்பதாக அரசு தரப்பு வாதிட்டது.
ஆனால் 250 கிராம் அளவு கைப்பற்ற ஆட்டிறைச்சியில் கழிவுகளை அகற்றி 2 மில்லி கிராம் இறைச்சி மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் எத்தனை மில்லி கிராம் மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சியின் அளவு குறித்து சுகாதார அமைச்சு விளக்கமளிக்கவில்லை என சிவநேசன் கூறினார்.
1983 உணவு சட்டம் செக்ஷன் 13b (1), 13b (2) (a) கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் மல்லிகா குற்றமற்றவர் என நீதிபதி ஸெலாத்துல் கமிலா பிந்தி ஸக்காரியா தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட உணவு பரிசோதனையில் மல்லிகா விலாஸ் உணவகம் உட்பட நான்கு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என சிவநேசன் கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக அஸ்மான் நிஸாம் ஆஜாரான வேளையில் மல்லிகா தரப்பு வழக்கறிஞர்களாக சிவநேசனும் பிரான்சிஸ் சின்னப்பன் ஆகியோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment