Sunday 26 November 2017

'ஹி.மு.- ஹி.பி.' - அத்தியாயம் -1 (ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களின் உரிமை சித்தாந்தம்)


ஆக்கம்:புகழேந்தி

(இந்த கட்டுரையில் இடம்பெறும் தகவல்கள் நாளிதழ், இணைய ஊடகங்களின் செய்திகள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).

கோலாலம்பூர்-

'நவம்பர் 25'- இந்த நாளை மலேசிய அரசியல் சித்தாந்தம் ஒருபோதும் மறந்து விடவும் முடியாது, ஒதுக்கி வைக்கப்படவும் முடியாது. இதே நாளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் உரிமைப் போராட்டம் அரசியல் நிலைத்தன்மையில் கோலோச்சிய கூட்டமைப்பின் சாம்ராஜியத்தை ஆட்டம் காண செய்தது.

'மலேசியா'.... உலக நாடுகளின் பார்வையில் வளர்ந்து வரும் நாடாகவும் பல இன மக்கள் சேர்ந்து வாழ்ந்த போதிலும் எவ்வித இனம், மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையை நிலைநாட்டுகின்ற ஒரு நாடாகவும் புகழ் பெற்று விளங்கியது.

ஆனால் அத்தகைய நாட்டில் வளர்ச்சி பாதையில் காலுன்ற வேண்டிய ஒரு சமுதாயம் புறக்கணிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டு வருவதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த இனம் எழுச்சி கண்ட நாளே 'நவம்பர் 25'.

ஆம்... அதுதான்  மலேசிய அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்த 'ஹிண்ட்ராஃப்' பேரணியாகும்.  ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட இந்திய சமுதாயம் தனது உரிமைக்காக ஒன்றுகூடி குரலெழுப்பி வீதி போராட்டம் நடத்தி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

5 தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயத்தையே  ஒன்று திரட்டி வீதிப் போராட்டத்தை நடத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.  தான் ஏமாற்றப்பட்டோம்; ஏமாற்றப்படுகிறோம் என அறிந்த இந்திய சமுதாயத்தின் கொந்தளிப்பில் உருவான இந்த உரிமை எழுச்சி போராட்டத்தை இதற்கு முன் மலேசிய திருநாடு கண்டதில்லை எனலாம்.

கட்டுக் கடங்காத கூட்டம், திரும்பும் திசையெல்லாம் இளைஞரணி பட்டாளம் என ஹிண்ட்ராஃப் பேரணியில் ஒன்று திரண்டு ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்தியர்களுக்கு கிடைத்தது ரசாயன நீர் பாய்ச்சலும், கண்ணீர் புகை குண்டுகளும் , 'எஃப்ஆர்யூ' அதிகாரிகளின் அடியும், கைதும், நீதிமன்ற வழக்குகளும் தான்.

ஓர் இனத்தின் எழுச்சிக் குரலாக உருவெடுத்த ஹிண்டராஃப் பேரணியின் தாக்கம் அடுத்த நான்கு மாதங்களில் நடந்தேறிய 12ஆவது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வலுவான அதிகாரத்துடன் ஆட்சி புரிந்த தேசிய முன்னணிக்கு 'மரண அடி'யை கொடுத்து பல இறுமாப்புடன் திரிந்த பல தலைவர்களை தோற்கடிக்கச் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்த 'ஹிண்ட்ராஃப்' போராட்டம் பல திசைகளில் பயணித்து இன்று அதன் தடத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது பரிதாபத்திற்குரியதாகும்....
                                                                                                   - நாளை தொடரும்-

("ஹிண்ட்ராஃப் போராட்டம் எப்படி உருவானது, அதை வழிநடத்திய தலைவர்கள் யார், ஹிண்ட்ராஃப் போராட்டம் பூதாகரமாக வெடிக்க காரணம் என்ன, அதனால் ஏற்பட்ட பின்னடைவு என்ன?" போன்ற விவரங்களை நாளைய தொடரில் காண்போம்".)

No comments:

Post a Comment