Thursday 2 August 2018

அதிரடிச் சோதனை; 10 பேர் கைது; போதைப்பொருட்கள் பறிமுதல்


ஈப்போ-
கடந்த இரு நாட்களில் பேரா மாநில போதைப்பொருள் குற்றவியல் விசாரணை பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 36 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதோடு 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஈப்போவிலுள்ள மெங்களம்பு, கம்போங் தாவாஸ் பகுதியிலும் தைப்பிங், பொக்கோக் அசாம் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதன் ஏசிபி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி காலை 11.30 மணியளவில் போதைப்பொருள் குற்றவியல் விசாரணை பிரிவினர் தாமான் கிளேடாங் பெர்மாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த 39 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞரை பரிசோதனை செய்ததில் 17.20 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் நிரப்பப்பட்ட 12 பொட்டலங்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு 516.00 வெள்ளியாகும். சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்ட நிலையில் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதே நாளில் நண்பகல் 12.30 மணியளவில் தாமான் கிளேடாங் பெர்மாயில் உள்ள உணகவம் ஒன்றில் 23 முதல் 40 வயதுக்குட்பட்ட 3 இந்திய இளைஞர்களை தடுத்து விசாரித்ததில் தாமான் ராசி ஜெயா பகுதியில் சோதனை மேற்கொண்ட  சம்பந்தட்ட அதிகாரிகள் 325 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருளை உள்ளடக்கிய 200 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 9,750.00 வெள்ளியாகும். இம்மூவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது.

மேலும், நேற்று 31ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஈப்போ, தாமான் பெர்த்துவாவில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 12,944.10 வெள்ளி மதிப்புடைய  431.47 கிராம் எடை கொண்ட ஹொரோய்ன் போதைப்பொருளை உள்ளடக்கிய 31 பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றியதோடு 31 வயது மதிக்கத்தக்க ஓர் இந்திய ஆடவரை கைது செய்தனர். இவ்வாடவர் இன்று  1ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதோடு, தைப்பிங்கிலுள்ள சிம்பாங், தாமான் பெங்கலான் மாஜுவில் உள்ள ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது 13,800 வெள்ளி மதிப்புடைய  460 கிராம் எடை கொண்ட ஹொரோய்ன் பொட்டலத்தையும்  450 வெள்ளி மதிப்புடைய 3.0 கிராம் எடை கொண்ட ஷாபு போதைப்பொருள் அடங்கிய 5 பொட்டலங்களையும் கைப்பற்றியதோடு 3 வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள், 60,480 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த அனைத்து சோதனை நடவடிக்கையின் வாயிலாக 36,944,10 வெள்ளி மதிப்புடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை யாவும் 1952 அபாயகர போதைப்பொருள் தடுப்பு சட்டம் செக்‌ஷன் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.


No comments:

Post a Comment