Saturday 3 March 2018

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாநில நிலையில் சாதனை படைத்து வருகின்றனர் - சுப.சற்குணன் புகழாரம்


ஈப்போ-

பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கித்திலேயே பல விளையாட்டுப் போட்டிகளில் மாநில நிலையில் தமிழப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர் என்று ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் புகழாரம் சூட்டினார்.

இப்பள்ளியின் மாணவியாகிய கீர்த்திகா ஆனந்தராஜ் மாநில நிலையில் பூப்பந்து போட்டியின் முதலாவது வெற்றியாளராக தேர்வுபெற்று சாதனை செய்துள்ளார். சீன மாணவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவரும் பூப்பந்து போட்டியில் அவர்களை முறியடித்து மாணவி கீர்த்திகா ஆனந்தராஜ் மாநில நிலையில் வெற்றியை ஈட்டியுள்ளார். மாணவியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த திங்கட்கிழமை பள்ளிப் பேரணியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுப.சற்குணன் பேசினார்.

அப்பள்ளியின் தலைமையாசிரியர் முனுசாமி பேசுகையில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றவர்களைவிட சளைத்தவர்கள் அல்லர். முறையான பயிற்சியும் சரியான வாய்ப்பும் கிடைத்தால் நமது மாணவர்களும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு மாணவி கீர்த்திகா நல்ல எடுத்துக்காட்டு என்றார்.

பள்ளியின் பெ.ஆ.சங்கத்தின் துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோரோடு பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அண்மைய காலமாகப் பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் விளையாட்டுத் துறையில் சிறந்த வெற்றிகளைக் கண்டு வருகின்றன. பேரா மாநில நிலையில் நடந்த குறுக்கோட்டப் போட்டியில் ஊத்தான் மெலிந்தாங் தமிழ்ப்பள்ளி மாணவன் திருவரசு இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். சதுரங்கப் போட்டியில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவன் வசந்த்ராஜ் ரமேஷ் மாநில நிலையில் இரண்டாம் பரிசை வென்றுள்ளார்.

ஸ்குவாஷ் போட்டியில் ஈப்போ, சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் கிஷன் ஜீவதுரை மாநிலப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இப்படி நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் பெற்றோர்களையும் கண்டிப்பாகப் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று சுப.சற்குணன் மேலும் தெரிவித்தார்.


1 comment:

  1. வாழ்க தமிழ்ப்பள்ளி. வளர்க தமிழ்மாணவர் சாதனை

    ReplyDelete