Thursday 22 March 2018
"தேமு நல்ல அரசாங்கம் தான்; ஆனால் அலட்சியமும் பலவீனமுமே எதிர்க்கட்சியின் 'கையை' ஓங்க வைக்கிறது"; புந்தோங் மக்களின் ஆதங்கம்
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ள நாட்டின் 14ஆவது பொது தேர்தல் வெகு விரைவில் நடைபெறலாம் என கருதப்படும் சூழலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வெற்றி கொள்ள முடியுமா? என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.
2008ஆம் ஆண்டு நிகழ்ந்த 'அரசியல் சுனாமி'யில் எதிர்க்கட்சி வசம் வீழ்ந்த இத்தொகுதி கடந்த பொதுத் தேர்தலின்போதும் மீண்டும் எதிர்க்கட்சி வசம் வீழ்ந்தது.
மலேசியவிலேயே அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் மசீச போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த பொதுத் தேர்தலின்போது மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆயினும் பலத்த போட்டியை ஏற்படுத்திய இத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் ஜசெகவிடம் தோல்வி கண்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக திருமதி தங்கராணி போட்டியிடக்கூடும் என அனுமானிக்கப்படும் நிலையில் ஜசெக சார்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியமும் பிஎஸ்எம் கட்சி சார்பில் திருமதி ராணி ஜெயகுமாரும் போட்டியிடவுள்ளனர்.
இந்த தொகுதி ஜசெகவின் கோட்டை என்றும் இங்கு தேசிய முன்னணியால் வெற்றி பெற முடியாது எனவும் பலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாகவே சொல்லி விட்டுச் செல்கின்றனர்.
ஆனால் தேசிய முன்னணியை நாங்கள் ஒருபோதும் ஒதுக்கியதில்லை, தேசிய முன்னணி இழைத்த தவறுகளின் அடிப்படையிலேயே இத்தொகுதியில் ஐசெக வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என புந்தோங் வாழ் மக்கள் கருத்துகளை கூறுகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிய விளைவே இன்று எதிர்க்கட்சி வசமாக புந்தோங் தொகுதி மாறியுள்ளது.
ஆளும் தேசிய முன்னணி அரசு நல்ல அரசாங்கம் தான். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அதிகாரிகளும் பதவி வகிப்பவர்களும் தங்களது கடமையை சரிவர செய்யாததன் எதிரொலியாகவே எதிர்க்கட்சியின் 'கை' ஓங்கியுள்ளது.
கடந்த கால தவறுகளில் பாடம் கற்று தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு சேவையாற்றினால் மட்டுமே தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற முடியும் என கூறும் புந்தோங் மக்கள், தேசிய முன்னணியை நாங்கள் புறக்கணிக்கவில்லை; எதிர்க்கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டோம்' என தங்களது மனவேதனையை மக்கள் வெளிபடுத்தினர்.
புந்தோங் வாழ் மக்களின் மன வேதனையும் ஆதங்கமும் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பியதன் பின்னணியும் விரைவில் 'மை பாரதம்' மின்னியல் ஊடகத்தில் ஆராயப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment