ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
'மக்களுக்காக நான்; மக்களோடு நான்' என்ற கோட்பாட்டில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தொழிலதிபர் யோகேந்திரபாலனுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஹீவூட் தோட்ட முன்னாள் குடியிருப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தனர்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மிகவும் அரசியல் பரபரப்பு மிக்க தொகுதியாகும். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்கள் பதவி வகித்த இத்தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கிறது.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளூர் வேட்பாளருக்கு இத்தொகுதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலர் வேண்டுகோள் விடுக்கின்றனர் என்று அதன் தலைவர் ரமேஷ் மல்லேரி, செயலாளர் செல்வராஜு ஆகியோர் குறிப்பிட்டனர்.
உள்ளூர் வேட்பாளர் போட்டியிட்டால் சுங்கை சிப்புட் தொகுதியில் தேசிய முன்னணிக்கு ஆதரவு கூடும் என கூறிய இவர்கள், மக்கள் விரும்பும் வேட்பாளரை களமிறக்குவதில் தேசிய முன்னணி முன்வர வேண்டும்.
மக்களின் ஆதரவை பெற்ற ஒருவராலேயே சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்ற சூழலில் பல ஆண்டுகளாக இங்கு சேவையாற்றி வரும் யோகேந்திரபாலனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இந்நிலையில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்கூட யோகேந்திரபாலனுக்கு ஆதரவு வழங்க முன்வருகின்றனர்.
மக்களுக்கு சேவை செய்து வருவதை தொடர்ந்து கொண்டிருக்கும் யோகேந்திரபாலன், மக்களின் சிறந்த தேர்வாக உள்ளார். அவரையே வேட்பாளராக களமிறக்க தேசிய முன்னணி பரிசீலிக்க வேண்டும் என ரமேஷ், செல்வராஜு ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment