Friday 23 March 2018

கேமரன் மலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் தேடிய 'அருமருந்து'தான் நான் - டான்ஶ்ரீ கேவியஸ்- பகுதி- 2


நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

கேமரன் மலை-

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இழந்து விடக்கூடாது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தேடிய அருமருந்து தான் நான் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.

மஇகாவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலை 'சுயேட்சை' நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்ததன் மூலம் ஒரு தொகுதி இழக்கப்படுவதை பிரதமர் விரும்பவில்லை.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே கேமரன் மலையில் களமிறங்கி சேவையாற்றி வருவதாக கூறிய டான்ஶ்ரீ கேவியசுடன் 'மை பாரதம்' மின்னியல் ஏடு நேர்காணல் நடத்தியது.

அந்த நேர்காணலின் தொகுப்பு தொடர்கிறது.

கே: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடாத சூழல் ஏற்பட்டால் உங்களின் நிலை?

ப: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறேன். மக்களுக்கான சேவை
மையத்தை தொடங்கி எப்போதும் இங்கேயே இருக்கிறேன்.

கேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான எனது சேவைகள் ஒருபோதும் நின்று விடாது.

தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் தோற்றாலும் இங்கேயே இருந்து சேவை செய்வேனே தவிர இவ்விடத்தை ஓடி போய் விடமாட்டேன்.
சிலர் வரலாம்; போகலாம். இங்கு போட்டியிடுவதாக சொல்லி கொண்டு சிலர் வரலாம். தேர்தலில் தோற்றால் அவர்கள் காணாமல் போய்விடுவர். ஆனால்
நான் இங்கேயே நிரந்தரமாக இருப்பேன். மக்களோடு மக்களாக நான் எப்போதும் இருப்பேன், மக்களுக்கான எனது சேவை ஒருபோதும் ஓய்ந்து விடாது.

கே: கேமரன் மலை தொகுதி விவகாரம் தொடர்பில் மஇகா தலைவர் பேச்சுவார்த்தை நடத்தாதது தொடர்பில்?

ப: மஇகா தலைவர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்தை சந்தித்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்த சந்திப்பில் 'தொகுதி விவகாரத்தை பிரதமர் முடிவுக்கே விட்டு விடுவோம்' என கூறினார்.

ஆனால் அண்மை காலமாக 'கேமரன் மலை விவகாரத்தில் பிரதமர் முடிவை விட நான் முடிவெடுத்து சொல்வேன்' என கூறியிருந்தார். பிரதமரின்  முடிவை மாற்ற சொல்லும் அளவுக்கு நான் செல்ல மாட்டேன்.
பிரதமர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு இருப்பேனே தவிர, அவரை முடிவில் தலையிட மாட்டேன்.

கட்சியில் விசுவாசமும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதும் மிகவும் முக்கியமாகும். அதன் அடிப்படையில் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கேமரன் மலையில் மைபிபிபி வேகம் குறைந்து விடாது. இங்கு எப்போதுமே சேவை மையம் செயல்படும்.

கே: கடந்த தேர்தலில் போட்டியிட்ட பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் சேவையாற்றாமல் கேமரன் மலைக்கு களமிறங்கியது குறித்து...?

ப: 1990இல் பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றபோது யாருடைய தொகுதியும் எனக்கு வழங்க வேண்டாம் என  கேட்டுக் கொண்டதற்கிணங்க அப்போதைய பிரதமர் துன் மகாதீர் லிப்பிஸ் நாடாளுமன்றத் தொகுதியை பிரித்து கேமரன் மலையை எனக்காக உருவாக்கினார்.

ஆனால் 2003இல் துன் மகாதீர் பதவி விலகியபோது 2004இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவி மஇகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலுவின் 'சதி'யால் அத்தொகுதியை மஇகாவுக்கு வழங்கினார்.

அத்தேர்தலில் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்பட்டது. அதில் தோற்றுவிடுவேன் என நினைத்தார்கள். ஆனால் வெற்றி பெற்றேன். பின்னர் கெராக்கான் கட்சி  கேட்டுக் கொண்டதற்கிணங்க அத்தொகுதியை விட்டுக் கொடுத்தேன்.

கடந்த பொதுத் தேர்தலில் 'சீட்' இல்லை என அமைதியாக இருந்த நிலையில் பாசீர் பெடாமார் தொகுதியை வழங்கினர். அந்த தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் வேட்புமனு நாளுக்கு ஒருநாள் முன்பு ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டதால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என பிரதமர் கூறினார்.

அங்கு வேறொருவரை களமிறக்கி சர்ச்சையாவதை விட நீங்களே களமிறங்குங்கள் என பிரதமர் கேட்டுக் கொண்டதால் களமிறங்கினேன். தேசியத் தலைவர் எனும் நிலையில் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்குவது வருத்தமாக தான் இருந்தது. ஆயினும் ஒரு 'விஷ பரீட்சை'யாக அங்கு களமிறங்கினேன்.

இம்முறை அத்தொகுதியை மசீச எடுத்துக் கொண்டதால் எனக்காக உருவாக்கப்பட்ட கேமரன் மலைக்கே வந்து விட்டேன்.

கே: இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஶ்ரீ பழனிவேல் திகழ்கின்ற போதிலும் நீங்கள் களமிறங்கியதன் நோக்கம்?

ப: இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் இன்னமும் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்.

அவரை கட்சியிலிருந்து நீக்கி, இத்தொகுதியை இத்தொகுதியை சுயேட்சை நாடாளுமன்றத் தொகுதியாக அறிவித்த பின்னர்தான் இங்கு களமிறங்கினேன்.

பழனிவேலை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்த பின்னர் வெற்றி பெறக்கூடிய அத்தொகுதியை இழந்து விடக்கூடாது என பிரதமர் தேடிய 'அருமருந்து' தான் நான்.

வெற்றி வாய்ப்புள்ள இத்தொகுதியை இழந்து விடக்கூடாது என பிரதமர் எடுத்த முடிவின் பயனாக நான் களமிறங்கினேன். இங்கு மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

-தொடரும்...-

No comments:

Post a Comment